search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னை, மதுரை, கோவை, திருச்சியில் ரவுடிகளை அலறவிடும் போலீஸ் துப்பாக்கிச்சூடு
    X

    சென்னை, மதுரை, கோவை, திருச்சியில் ரவுடிகளை அலறவிடும் போலீஸ் துப்பாக்கிச்சூடு

    • துரை மற்றும் அவரது சகோதரர் சோமசுந்தரம் இருவரும் இன்ஸ்பெக்டர் மோகன் உள்ளிட்ட 3 போலீசாரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச்செல்ல முயன்றனர்.
    • மதுரை மாட்டுத்தாவணி உலகநேரி பகுதியை சேர்ந்த ரவுடி டோரா பாலா என்கிற பாலமுருகன் கடந்த மாதம் 22-ந்தேதி படுகொலை செய்யப்பட்டார்.

    கோவை:

    தமிழகத்தில் விசாரணையின்போது தப்பிச்செல்லும் ரவுடிகளை கடந்த ஒரு மாதமாக போலீசார் அடுத்தடுத்து துப்பாக்கியால் சுட்டு பிடித்து வருகிறார்கள்.

    கோவை கோர்ட்டு அருகே கடந்த மாதம் 12-ந் தேதி பிரபல ரவுடி கோகுல் என்பவரை ஒரு கும்பல் வெட்டி படுகொலை செய்தது. பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேர் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் பதுங்கி இருந்தனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக அவர்களை போலீசார் வேனில் ஏற்றி அழைத்து வந்தனர்.

    கைதானவர்களில் கவுதம், ஜோஸ்வா ஆகியோர் நடுவழியில் போலீசாரை தாக்கி தப்பிக்க முயன்றனர். போலீசார் அவர்கள் 2 பேரையும் சுட்டுப்பிடித்தனர். அவர்கள் 2 பேர் காலிலும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அவர்கள் சிகிச்சை பெற்றனர்.

    திருச்சி வண்ணாரப்பேட்டை எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்த ரவுடி சகோதரர்களான துரை என்ற துரைசாமி, சோமசுந்தரம் ஆகியோர் மீது 5-க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள், 60-க்கும் மேற்பட்ட கொள்ளை, வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    இதில் திருச்சி தில்லை நகரில் நடந்த கொள்ளை வழக்கில் நீண்ட கால தேடுதலுக்கு பின்னர் திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் கடந்த 20-ந்தேதி அவர்களை நள்ளிரவில் கைது செய்தனர். பின்னர் காலையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மற்றும் ஆயுதங்களை கைப்பற்றுவதற்காக ஜீப்பில் இருவரையும் அழைத்து சென்றனர்.

    அப்போது துரை மற்றும் அவரது சகோதரர் சோமசுந்தரம் இருவரும் இன்ஸ்பெக்டர் மோகன் உள்ளிட்ட 3 போலீசாரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச்செல்ல முயன்றனர்.

    இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கால் முட்டியில் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். தற்போது இருவரும் பலத்த பாதுகாப்புடன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    அதைத்தொடர்ந்து பிப்ரவரி 22-ந் தேதி சென்னை அயனாவரத்தில் ரவுடி சூர்யா என்பவன் போலீசாரை தாக்கி விட்டு தப்பிக்க முயன்றான்.

    அப்போது பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கீதா துணிச்சலாக செயல்பட்டு சூர்யா மீது துப்பாக்கியால் சுட்டார். இதில் சூர்யாவின் காலில் காயம் ஏற்பட்டது. பின்னர் அவனை போலீசார் மடக்கிப்பிடித்தனர்.

    மதுரை மாட்டுத்தாவணி உலகநேரி பகுதியை சேர்ந்த ரவுடி டோரா பாலா என்கிற பாலமுருகன் கடந்த மாதம் 22-ந்தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் ஜெகதீஸ்வரன் என்பவர் சிக்கிய நிலையில், ரவுடி வினோத் உள்ளிட்ட 4 பேரை போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் மதுரை பாண்டியன் கோட்டை கல்குவாரியில் பதுங்கியிருந்த ரவுடி வினோத்தை கடந்த மாதம் 28-ந்தேதி காலை போலீசார் பிடிக்க முயன்றனர். அப்போது அவர் போலீஸ் ஏட்டு சரவணனை அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்ப முயன்றார்.

    இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் தன்னிடம் இருந்த கைத்துப்பாக்கியால் வினோத்தின் காலில் சுட்டார். இதனால் அவர் தப்பி ஓட முடியாமல் சுருண்டு விழுந்தார். இதையடுத்து வினோத்தை போலீசார் கைது செய்தனர். துப்பாக்கி சூட்டில் காலில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    இதேபோல தமிழகத்தில் ரவுடிகள் போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்து வருகிறார்கள். துப்பாக்கிச்சூட்டின்போது மரணம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு போலீசார் காலில் குறி வைத்து சுட்டு அவர்களை பிடிக்கிறார்கள்.

    Next Story
    ×