search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கன்னியாகுமரிக்கு பிரதமர் மோடி வருகை தேதி திடீர் மாற்றம்
    X

    கன்னியாகுமரிக்கு பிரதமர் மோடி வருகை தேதி "திடீர்" மாற்றம்

    • தமிழகத்தில் ஏற்கனவே திருப்பூர் மாவட்டம் பல்லடம், நெல்லை ஆகிய பகுதிகளில் தேர்தல் பிரசார கூட்டங்களில் பங்கேற்று பேசினார்.
    • பிரதமர் மோடி பங்கேற்று பேசும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ள மைதானத்தை போலீஸ் அதிகாரிகள் நேற்று பார்வையிட்டனர்.

    நாகர்கோவில்:

    பாராளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் பிரதான கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன. கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர்கள் அறிவிப்பு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

    பிரதமர் நரேந்திரமோடி, பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு திரட்டி பல்வேறு மாநிலங்களிலும் சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார். இந்த தேர்தலில் தென்மாவட்டங்களில் கணிசமான இடத்தை பிடிக்க வேண்டும் என பா.ஜனதா திட்டமிட்டுள்ளது.

    அதனை கருத்தில் கொண்டு பிரதமர் மோடி சமீபகாலமாக தமிழகம் மற்றும் கேரளாவில் அடிக்கடி சுற்றுப்பயணம் செய்து பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கி வைத்தது மட்டுமின்றி, பிரசாரத்திலும் ஈடுபட்டார்.

    அவர் தமிழகத்தில் ஏற்கனவே திருப்பூர் மாவட்டம் பல்லடம், நெல்லை ஆகிய பகுதிகளில் தேர்தல் பிரசார கூட்டங்களில் பங்கேற்று பேசினார். இந்நிலையில் அவர் மீண்டும் தமிழகம் வர உள்ளார்.

    அவர் தென் மாவட்டங்களில் உள்ள பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜனதா மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரசாரம் செய்வார் என்றும், கன்னியாகுமரியில் வருகிற 16-ந்தேதி நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்று பேசுவார் எனவும் கூறப்பட்டிருந்தது.

    இந்தநிலையில் அவரது பயணத்தில் 'திடீர்' மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் ஒரு நாள் முன்னதாக வருகிற 15-ந் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அன்றைய தினம் கன்னியாகுமரி விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் பகல் 11 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மோடி பங்கேற்று பேச உள்ளார்.

    அப்போது அவர் பாரதிய ஜனதா மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார். பிரதமர் மோடி பங்கேற்று பேசும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ள மைதானத்தை போலீஸ் அதிகாரிகள் நேற்று பார்வையிட்டனர்.

    அங்கு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினர். குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    பொதுக்கூட்ட திடலுக்கு பாரதிய ஜனதா கட்சியினர் இன்று காலை சென்றனர். பந்தல் அமைப்பது, பொதுக்கூட்ட மேடை அமைப்பு பணி குறித்து அவர்கள் திட்டமிட்டனர். அந்த பணிகளை இன்று மாலை தொடங்கவும் அவர்கள் திட்டமிட்டு உள்ளனர்.

    பிரதமர் வருவதற்கு இன்னும் 2 நாட்களே இருப்பதால் பொதுக்கூட்டம் நடக்கும் மைதானத்தில் போலீசார் கண்காணிப்பு பணியை தொடங்கி உள்ளனர்.

    Next Story
    ×