search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம்: கவர்னர் மாளிகை முன்பு என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஆய்வு
    X

    பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம்: கவர்னர் மாளிகை முன்பு என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஆய்வு

    • கவர்னர் மாளிகை அருகே அக். 25-ந்தேதி 2 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன.
    • கவர்னர் மாளிகையில் கிண்டி நுழைவுவாயில் முன்பு பாதுகாப்பு பணியில் கூடுதல் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    சென்னை:

    சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை முன்பு கடந்த அக்டோபர் மாதம் 25-ந்தேதி பெட் ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    பிரபல ரவுடியான கருக்கா வினோத் 4 பாட்டில்களில் பெட்ரோல்களை நிரப்பிக்கொண்டு கவர்னர் மாளிகையின் பிரதான நுழைவு வாயில் முன்பு பெட்ரோல் குண்டுகளை வீசினான்.

    இதில் 2 பெட்ரோல் குண்டுகள் வாசல் அருகே சற்று தூரத்தில் விழுந்து வெடித்து சிதறியது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கருக்கா வினோத்தை பிடிக்க முயன்றனர். அப்போது போலீசாரை நோக்கியும் கருக்கா வினோத் பெட்ரோல் குண்டுகளை வீசினான்.

    இந்த குண்டுகள் கவர்னர் மாளிகை அருகில் செடிகள் வைக்கப்பட்டிருந்த இடத்தில் போய் விழுந்தது. அதிர்ஷ்டவசமாக போலீசார் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    இப்படி பரபரப்பான நேரத்தில் கவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டுகளை வீசிய ரவுடி கருக்கா வினோத்தை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று எழுந்த கோரிக்கையையடுத்து மத்திய அரசு என்.ஐ.ஏ. விசாரணைக்கு உத்தரவிட்டது.

    கடந்த மாதம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். கருக்கா வினோத்தின் பின்னணியில் சிலர் இருப்பதாகவும் அவர்கள் யார்-யார்? என்பது பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஏற்கனவே கோரிக்கை எழுந்திருந்த நிலையில் அது தொடர்பான விசாரணையை என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டனர்.

    இந்த நிலையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட கிண்டி கவர்னர் மாளிகை முன்பு என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

    தடயவியல் நிபுணர்களின் துணையுடன் சுமார் 1 மணி நேரம் ஆய்வு செய்த அதிகாரிகள் கருக்கா வினோத் எங்கிருந்து பெட்ரோல் குண்டுகளை வீசினான்? அது எந்தெந்த இடங்களில் போய் விழுந்து வெடித்தது? என்பது போன்ற விவரங்களை கேட்டறிந்தனர்.

    இது தொடர்பாக பெட்ரோல் குண்டு வீசப்பட்ட அன்று பணியில் இருந்த ஆயுதப்படை போலீஸ்காரரான சில்வானுவிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவரிடம் கூடுதலாக விசாரணை நடத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு செய்தனர்.

    இதற்காக காவலர் சில்வானுவை விசாரணைக்காக தங்களுடன் அழைத்துச் சென்றனர். புரசைவாக்கத்தில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்தில் வைத்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் பெற்றனர். அதன் அடிப்படையில் அடுத்த கட்ட விசாரணையை தீவிரப்படுத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

    இதற்கிடையே ரவுடி கருக்கா வினோத்தை காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்காக பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் கருக்கா வினோத்தை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி கேட்டு என்.ஐ.ஏ. அதிகாரிகள் மனுதாக்கல் செய்துள்ளனர். இந்த மனு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது கருக்கா வினோத்துக்கு எத்தனை நாட்கள் என்.ஐ.ஏ. காவல் கிடைக்கும் என்பது தெரிய வரும். அதன் பின்னர் கருக்கா வினோத்தை அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளனர்.

    Next Story
    ×