search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வானில் தோன்றிய அரிய நிகழ்வு- சூரிய கிரகணத்தை கண்டுகளித்த மக்கள்

    • நாட்டின் பெரும்பாலான இடங்களில் பகுதி நேர சூரிய கிரகணத்தை காண முடிந்தது.
    • கிரகணத்தை பொதுமக்கள் வெறும் கண்களால் பார்க்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது

    சென்னை:

    சூரியனை நிலவின் நிழல் பகுதியளவு மறைக்கும் பகுதி சூரிய கிரகணம் இன்று நிகழ்கிறது. இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் இதுவாகும். உலக அளவில் இன்று மதியம் 2.19 மணிக்கு தொடங்கிய சூரிய கிரகணம் ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்காவின் வடகிழக்கு பகுதிகள், மேற்கு ஆசியா, வட அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் வட இந்தியப் பெருங்கடல் ஆகியவற்றை உள்ளடக்கிய பிராந்தியத்தில் தெரிந்தது. ரஷியாவின் மத்திய பகுதியில் 80 சதவீதம் வரை சூரிய கிரகணத்தை பார்க்க முடிந்தது.

    இந்தியாவில் வடகிழக்கில் உள்ள ஒரு சில மாநிலங்களைத் தவிர நாட்டின் பெரும்பாலான இடங்களில் பகுதி நேர சூரிய கிரகணத்தை காண முடிந்தது. உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சிறப்பு கண்ணாடி மூலம் சூரியகிரணத்தை கண்டுகளித்தார். இந்தியாவில் சூரியகிரகணம் மாலை 5.11 மணியளவில் தொடங்கியது. தமிழகத்தில் 5.14 மணிக்கு கிரகணம் தெரியத் தொடங்கியது. 5.44 மணி வரை தெரியும் என கணிக்கப்பட்டுள்ளது.

    இந்த கிரகணத்தை பொதுமக்கள் வெறும் கண்களால் பார்க்கக்கூடாது எனவும், சூரிய வெளிச்சத்தைக் குறைக்கும் தன்மையுடைய சிறப்பு கண்ணாடிகள் அணிந்தும், சூரியனின் பிம்பத்தை ஒரு வெண்திரையில் விழச் செய்தும் பார்க்கலாம் எனவும் அறிவியலாளர்கள் அறிவுறுத்தினர். அதன்படி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கிரகணத்தை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பொதுமக்கள் ஆர்வத்துடன் கிரகணத்தை பார்த்தனர்.

    சூரிய கிரகணம் தொடங்கியதை அடுத்து தமிழ்நாடு முழுவதும் கோயில்களின் நடை மூடப்பட்டது. கிரகணம் முடிந்த பின்னர் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    Next Story
    ×