என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஓ.பி.எஸ். அணி மாவட்ட செயலாளர் உள்பட நிர்வாகிகள் 106 பேர் கூண்டோடு ராஜினாமா
    X

    ஓ.பி.எஸ். அணி மாவட்ட செயலாளர் உள்பட நிர்வாகிகள் 106 பேர் கூண்டோடு ராஜினாமா

    • ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் ஓ.பி.எஸ். போட்டியிடுவோம் என்று அறிவித்தார்.
    • அறிமுகம் இல்லாத நபரை வேட்பாளராக அறிவித்து அவரை வாபஸ் பெறவும் சொன்னதால் அதிர்ச்சி அடைந்தோம்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் கே.எஸ். தென்னரசை எடப்பாடி பழனிசாமி வேட்பாளராக அறிவித்தார். இதையடுத்து ஓ.பன்னீர்செல்வமும் வேட்பாளரை நிறுத்த போவதாக அறிவித்தார்.

    இதனால் அரசியல் களத்தில் பரபரப்பு நிலவியது. ஓ.பி.எஸ். அணியின் வேட்பாளராக மாநகர் மாவட்ட செயலாளராக இருந்த முருகானந்தம் நிறுத்தப்படலாம் என்று தகவல் வெளியானது. இதையடுத்து அவர் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.

    இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் செந்தில்முருகன் என்பவரை ஓ.பன்னீர்செல்வம் வேட்பாளராக அறிவித்தார்.

    இதையடுத்து செந்தில் முருகனும் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். இதற்கிடையே அ.தி.மு.க. வேட்பாளரை பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யவேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் எடப்பாடி பழனிசாமி அறிவித்த கே.எஸ். தென்னரசுவை பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்தனர்.

    இந்த ஆதரவு கடிதங்கள் தலைமை தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க. அவை தலைவர் தமிழ் மகன் உசேன் வழங்கினார். இந்த நிலையில் அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ். தென்னரசுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

    இந்த நிலையில் தனது ஆதரவு வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ் பெறுவார் என்று ஓ.பன்னீர் செல்வம் அறிவித்தார். ஆனால் மனு வாபஸ் பெறுவதற்கு முன்பே பரிசீலனையின் போதே மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

    இதனால் மாநகர் மாவட்ட செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். முதலில் இரட்டை இலைக்காக போராடி விட்டு பின்னர் திடீரென வேட்பாளரை வாபஸ் பெற சொன்னதால் அவர்கள் தலைமை மீது அதிருப்தி அடைந்தனர்.

    இந்த நிலையில் ஓ.பி.எஸ். அணியின் மாநகர் மாவட்ட செயலாளர் முருகானந்தம், சூரம்பட்டி பகுதி செயலாளர் சசிகலா பெருமாள், வர்த்தகர் அணி மாவட்ட செயலாளர் ராஜமாணிக்கம், மருத்துவர் அணி மாவட்ட செயலாளர் சிவமுருகன், கருங்கல் பாளையம் தங்கராஜ் உள்பட 106 பேர் கூண்டோடு ராஜினாமா செய்யப்போவதாக தகவல் வெளியானது.

    இதுகுறித்து முருகானந்தத்திடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் ஓ.பி.எஸ். போட்டியிடுவோம் என்று அறிவித்தார். எனவே என்னை வேட்பாளராக நிறுத்த ஏற்பாடுகள் நடந்து வந்தது. இதற்காக நான் தேர்தல் பணிமனை அமைக்க இடம் தேர்வு செய்தேன். மேலும் தேர்தல் வேலைகளையும் தொடங்கினேன்.

    இந்த நிலையில் அறிமுகம் இல்லாத நபரை வேட்பாளராக அறிவித்து அவரை வாபஸ் பெறவும் சொன்னதால் அதிர்ச்சி அடைந்தோம். இது குறித்து நேற்று சென்னையில் தலைமையிடம் எடுத்து கூறினோம். ஆனால் எந்த பதிலும் வரவில்லை. எனவே தலைமையின் மீது ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக நான் உள்பட 106 நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்து உள்ளோம்.

    இந்த ராஜினாமா கடிதத்தை இன்று ஓ.பன்னீர்செல்வத்துக்கு அனுப்பி வைப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிலையில் ஓ.பி.எஸ். அணி சார்பில் ராஜினாமா செய்தவர்களுக்கு பதில் புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

    Next Story
    ×