search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    தமிழ்நாயுடு அல்ல.... தமிழ்நாடு: மத்திய அரசின் இணையதளத்தில் தமிழ்நாட்டின் பெயரை எழுதுவதில் கூட அலட்சியமா?- ராமதாஸ் கண்டனம்
    X

    தமிழ்நாயுடு அல்ல.... தமிழ்நாடு: மத்திய அரசின் இணையதளத்தில் தமிழ்நாட்டின் பெயரை எழுதுவதில் கூட அலட்சியமா?- ராமதாஸ் கண்டனம்

    • தமிழ்நாட்டின் பெயர் பிழையாக குறிப்பிடப்பட்டிருப்பது எழுத்துப்பிழை என்று மட்டும் கருதி கடந்து செல்ல முடியாது.
    • உலக அரங்கில் நாட்டிற்கு அவப்பெயரைத் தேடித் தரும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    டெல்லி குடியரசு நாள் விழா அணிவகுப்பில் பங்கேற்ற அலங்கார ஊர்திகளில் சிறந்த ஊர்தியை இணையவழி வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுப்பதற்கான மத்திய அரசின் இணைய தளத்தில் (www.mygov.in) தமிழ்நாட்டின் பெயர் தமிழ் நாயுடு (Tamil Naidu) என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

    தமிழ்நாட்டின் பெயர் பிழையாக குறிப்பிடப்பட்டிருப்பது எழுத்துப்பிழை என்று மட்டும் கருதி கடந்து செல்ல முடியாது. அரசின் இணையதளங்கள் அரசிதழுக்கு இணையானவை. அவற்றில் சிறிய பிழை கூட நிகழ அனுமதிக்கக்கூடாது. இது உலக அரங்கில் நாட்டிற்கு அவப்பெயரைத் தேடித் தரும்.

    தமிழ்நாடு பெயர் அண்மைக்காலமாக தேவையின்றி சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டு வரும் சூழலில், மத்திய அரசு இணையதளத்தில் தமிழ்நாட்டின் பெயர் தவறாக குறிப்பிடப்பட்டிருப்பது பல்வேறு வகையான ஐயங்களை ஏற்படுத்துகிறது. இந்த பிழை உடனடியாக சரி செய்யப்பட வேண்டும்.

    www.mygov.in இணைய தளத்தில் நடந்த இந்த பிழைக்கு அதை நிர்வகிக்கும் தேசிய தகவலியல் மையம் வருத்தம் தெரிவிக்க வேண்டும். தமிழ்நாட்டின் பெயர் பிழையாக பதிவு செய்யப்பட்டதற்கு காரணமானவர்கள் யார்? என்பது அடையாளம் காணப்பட்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×