search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வடமாநில தொழிலாளர்கள் என்ற பெயரில் சென்னைக்குள் வங்காளதேசத்தினர் ஊடுருவல்? என்.ஐ.ஏ. அதிரடி சோதனை
    X

    வடமாநில தொழிலாளர்கள் என்ற பெயரில் சென்னைக்குள் வங்காளதேசத்தினர் ஊடுருவல்? என்.ஐ.ஏ. அதிரடி சோதனை

    • போலி ஆதார் கார்டுகளுடன் வடமாநிலத்தினர் என தமிழகத்திற்குள் ஊடுருவல்
    • தமிழக போலீஸ் பாதுகாப்புடன் சோதனை

    தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் கட்டுமான தொழிலில் தொடங்கி ஜவுளிக்கடைகள், தனியார் தொழிற்சாலைகள், ஹோட்டல்கள், தேநீர் கடைகள் என அனைத்து துறைகளிலுமே வடமாநில தொழிலாளர்கள் நிறைந்து காணப்படுகிறார்கள்.

    இப்படி வடமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு சாரை சாரையாக வரும் தொழிலாளர்கள் சில நேரங்களில் சட்டவிரோத செயல்களிலும் ஈடுபட்டு கைதாகி வருகிறார்கள். இதையடுத்து வடமாநில தொழிலாளர்களின் சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்த போலீசார் அவர்களுக்கு தனியாக அடையாள அட்டைகளை வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்து உள்ளது. இது தொடர்பாக போலீசாரும் அவ்வப்போது அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் வட மாநில தொழிலாளர்கள் போர்வையில் வங்கதேச பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவி இருப்பதாக மத்திய உளவுப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் என்.ஐ.ஏ. என்று அழைக்கப்படும் தேசிய புலனாய்வு முகமை பிரிவு அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.

    சென்னையிலும் வட மாநில தொழிலாளர்கள் போல போலியான அடையாள அட்டைகளை காட்டி வங்கதேச தீவிரவாதிகள் ஊடுருவி இருக்கலாம் என்கிற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து சென்னை புறநகர் பகுதிகளில் வடமாநில தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் இன்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    சென்னையை அடுத்து உள்ள மறைமலைநகர், பள்ளிக்கரணை, படப்பை ஆகிய 3 இடங்களில் இன்று காலையில் சோதனையை தொடங்கிய அதிகாரிகள் வடமாநில தொழிலாளர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வங்காளதேசத்தை சேர்ந்த தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் அவ்வப்போது ஊடுருவி சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருவது அவ்வப்போது அரங்கேறி வருகிறது.

    அதனை தடுப்பதற்காக எல்லையோர பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் அவர்கள் வடமாநில தொழிலாளர்கள் என போலியான அடையாள அட்டைகளை காட்டி பல இடங்களில் தங்கி இருந்ததும் இதற்கு முன்பு வெளிமாநிலங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    அதுபோன்றே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வங்கதேச தீவிரவாதிகள் ஊடுருவி இருக்கலாம் என்கிற சந்தேகத்தின் பேரில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த சோதனையின் போது வடமாநில தொழிலாளர்களின் அடையாள அட்டையை வாங்கி என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதித்து பார்த்தனர். போலியான அடையாள அட்டைகளை யாரும் வைத்துள்ளார்களா? வடமாநில தொழிலாளர்கள் என கூறிக் கொண்டு வங்கதேச தீவிரவாதிகள் யாரும் ஊடுருவி இருக்கிறார்களா? என்பது பற்றி இந்த சோதனையின் போது விசாரணை மேற்கொள்ளப் பட்டது.

    சென்னை புறநகர் பகுதியான மறைமலை நகரில், கோவிந்தாபுரம் என்கிற இடத்திலும் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் தங்கியுள்ளனர். அந்த பகுதியில் வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்கி இருக்கும் அவர்களிடம் இன்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் அடையாள அட்டைகளை வாங்கி பார்த்து விசாரணை நடத்தினர். அப்போது திரிபுரா மாநிலத்தை சேர்ந்தவர் போன்ற ஆதார் அட்டையுடன் வாலிபர் ஒருவர் பிடிபட்டார்.

    ஆதார் அட்டையில் முன்னா என்கிற பெயர் இருந்தது. அவர் மீது என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் அடையாள அட்டையை பரிசோதித்து பார்த்தனர். அப்போது அது போலியான அடையாள அட்டை என்பது தெரிய வந்தது. பிடிபட்ட வாலிபர் திரிபுராவை சேர்ந்தவர் அல்ல என்பது உறுதியானது.

    இதையடுத்து அவரிடம் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். இதில் அவரது உண்மையான பெயர் சகாபுதீன் என்பது தெரிய வந்தது. வங்காளதேசத்தை சேர்ந்த அவர் சட்ட விரோதமாக போலியான அடையாள அட்டையை காட்டி சென்னைக்குள் ஊடுருவி இருக்கும் அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது.

    இவரை போன்று மேலும் 2 பேர் பிடிபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள படப்பை பகுதியில் ஜூஸ் பார்க் என்ற பெயரில் டீக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. வடமாநில வாலிபர் என்று கூறிக்கொண்டு அங்கு தங்கி இருந்த நபரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

    வங்காளதேசத்தை சேர்ந்த சகாபுதீனுக்கு தீவிரவாத குழுக்களுடன் தொடர்பு உள்ளதா? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. என்.ஐ.ஏ. அதிகாரிகள் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் போலீஸ் எல்லைக்குட்பட்ட தூராபள்ளம் கிராமத்தில் பிள்ளையார் கோவில் தெருவிலும் ஒரு வீட்டில் என்.ஐ.ஏ. சோதனை நடைபெற்றது. சப்ரான் என்ற நபர் தங்கி இருக்கிறாரா? என்பது பற்றி என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    ஆனால் அதுபோன்று யாரும் அங்கு தங்கி இருக்கவில்லை என்பது தெரிய வந்தது. இதையடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.

    திருப்பூர் பல்லடம் பகுதிகளில் உள்ள பனியன் நிறுவனங்களில் வடமாநில தொழிலாளர்கள் அதிக அளவில் பணியாற்றும் 3 பனியன் நிறுவனங்களில் இன்று காலை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.,) அதிகாரிகள் திடீரென அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அங்கு பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களின் ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை வாங்கி சரி பார்த்து சோதனை செய்து வருகின்றனர்.

    மேலும் வங்காளதேச தொழிலாளர்களை திருப்பூருக்கு வேலைக்கு அழைத்து வரும் முகவர்களின் விவரங்கள் மற்றும் அவர்கள் தங்கியிருக்கும் இடங்களிலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    இதையடுத்து என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தும் பனியன் நிறுவனங்கள் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    புதுச்சேரி எல்லைப் பிள்ளைச் சாவடியிலும் இன்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். வங்காளதேசம், பர்மா, மியான்மரில் இருந்து சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் ஆட்களை குடியேற்றம் செய்து அதன் மூலமாக தீவிரவாத செயல்களில் ஈடுபடுத்த ஒரு கும்பல் திட்டமிட்டுள்ளதாகவும் அதன் எதிரொலிப்பாகவே சோதனை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ள போதிலும் அங்கிருந்து ஆட்களை கடத்தி வந்து போலி அடையாள அட்டைகளை தயாரித்துக் கொடுத்து அதன் மூலமாக அவர்களை இங்கு கொத்தடிமைகள் போல விற்பனை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த 2 கோணங்களிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×