என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சசிகலா-ஓ.பி.எஸ்.சை ஆதரிப்பவர்களை ஓரம்கட்ட எடப்பாடி பழனிசாமி திட்டம்
    X

    சசிகலா-ஓ.பி.எஸ்.சை ஆதரிப்பவர்களை ஓரம்கட்ட எடப்பாடி பழனிசாமி திட்டம்

    • அ.தி.மு.க.வில் தற்போது 82 மாவட்ட செயலாளர்கள் உள்ளனர்.
    • எடப்பாடி பழனிசாமி, கட்சியில் அதிரடியாக சீர்திருத்தங்களை மேற்கொள்ள முடிவு செய்துள்ளார்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியடைந்ததையடுத்து அக்கட்சியின் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தினார்.

    பின்னர் கட்சியின் செயற்குழு கூட்டத்தையும் நிர்வாகிகளின் கருத்துக்களையும் கேட்டறிந்தார். இந்த கூட்டங்களின் போது அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் முன்னணி நிர்வாகிகள் மீது கீழ் மட்டத்தில் உள்ள நிர்வாகிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினார்கள். இதையெல்லாம் கவனமாக கேட்டுக் கொண்ட எடப்பாடி பழனிசாமி, கட்சியில் அதிரடியாக சீர்திருத்தங்களை மேற்கொள்ள முடிவு செய்துள்ளார்.

    அ.தி.மு.க.வில் தற்போது 82 மாவட்ட செயலாளர்கள் உள்ளனர். இவர்களில் சிலர் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் இருவரையும் கட்சியில் மீண்டும் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது. இவர்களை அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்ட எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார். அவர்களுக்கு பதிலாக தனது நெருங்கிய ஆதரவாளர்கள் 20 பேரை புதிய மாவட்ட செயலாளர்களாக நியமிக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

    அதே நேரத்தில் சுறுசுறுப்பாக செயல்படாத மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை பதவியில் இருந்து தூக்கவும் எடப்பாடி பழனிசாமி காய் நகர்த்தி வருகிறார்.

    சட்டமன்ற தொகுதிகள் வாரியாக மாவட்ட செயலாளர்களை நியமிக்கவும் அ.தி.மு.க. தலைமை முடிவு செய்துள்ளது. இப்படி கட்சியை மறு சீரமைப்பு செய்து விட்டால் சசிகலா, ஓ.பி.எஸ்.சுக்கு ஆதரவான குரல்கள் அடங்கிப் போய் விடும் என்பதே எடப்பாடி பழனிசாமியின் கணக்காக உள்ளது.

    வருகிற டிசம்பர் மாதம் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல், 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் ஆகியவற்றை எதிர் கொள்ளும் வகையில் இன்னும் சில மாதங்களிலேயே புதிய மாவட்ட செயலாளர்களை நியமித்து விட வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக உள்ளார்.

    கட்சி பணிகளில் வேகமாக செயல்பட்டு வரும் கீழ்மட்ட நிர்வாகிகளை மாவட்ட செயலாளர்களாக்கி விட்டால் அவர்கள் மேலும் சிறப்பாக செயல்படுவார்கள் என்கிற எண்ணத்தில் எடப்பாடி பழனிசாமி புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க திட்டமிட்டுள்ளதாக அ.தி.மு.க. மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் மேலும் கூறும்போது, 'தமிழகத்தில் பாஜக கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தால் மட்டுமே வெற்றிபெற முடியும் என்கிற நிலையே உள்ளது. இதனையே எடப்பாடி பழனிசாமி கடைபிடித்து வருகிறார். இதன் மூலம் பாஜக அல்லாத வலுவான கூட்டணியை அமைத்து வரும் காலங்களில் வெற்றி பெறுவோம்' என்றார்.

    Next Story
    ×