search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் தூக்கிட்டு தற்கொலை
    X

    பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் தூக்கிட்டு தற்கொலை

    • 12-ம் வகுப்பு படித்து வந்தவர்
    • மனஅழுத்தத்தில் இருந்து வந்ததாக தெரிகிறது

    தமிழ் திரை உலகில் பிரபல நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டை டி.டி.கே. சாலையில் உள்ள வீட்டில் அவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    விஜய் ஆண்டனியின் மூத்த மகள் பெயர் மீரா. 16 வயதாகும் இவர் அண்ணா சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். இளைய மகள் லாரா 5-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    பிளஸ்-2வில் முதல் குரூப் படித்து வந்த மீரா மன அழுத்தத்தில் இருந்து வந்து உள்ளார். இதற்காக ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. மன அழுத்தத்தை போக்க கவுன்சிலிங்கும் கொடுக்கப்பட்டு வந்ததாக தெரிகிறது. இருப்பினும் மீரா மனஅழுத்தத்தில் இருந்து மீள முடியாமல் தவித்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று இரவு மீரா வழக்கம்போல் தூங்கச் சென்றார். இன்று அதிகாலை 3 மணி அளவில் விஜய் ஆண்டனி, மகள் மீராவின் அறையை போய் பார்த்துள்ளார். அங்கு மகள் மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கில் தொங்கி கொண்டிருந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்து கூச்சல் போட்டார்.

    பின்னர் வீட்டு வேலைக்காரரின் உதவியுடன் மின்விசிறியில் இருந்து மகளை இறக்கி உடனடியாக ஆழ்வார்பேட்டை ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர். அங்கு மீராவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதைக் கேட்டு விஜய் ஆண்டனியும், அவரது குடும்பத்தினரும் அழுது கண்ணீர் வடித்தனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் தேனாம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தபாபு விரைந்து சென்று மீராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மீரா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் மனஅழுத்தம் காரணமாகவே அவர் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக் கொண்டிருப்பது தெரியவந்தது.

    பள்ளியில் பேட்மிட்டன் விளையாட்டை தேர்வு செய்து மீரா விளையாடி வந்துள்ளார். நேற்று பள்ளி விடுமுறை என்பதால் மீரா வெளியில் சென்று வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அப்போது அவர் யாரை சந்தித்தார்? எதற்காக போய் பார்த்தார்? என்ன பேசினார். என்பது பற்றிய விவரங்களையும் போலீசார் திரட்டி வருகிறார்கள்.

    மீராவின் மனஅழுத்தத்துக்கு காரணமாக அமைந்த விஷயங்கள் என்னென்ன? என்பது பற்றியும் போலீசார் தகவல்களை சேகரித்து வருகிறார்கள்.

    இது தொடர்பாக அவர் பயன்படுத்திய செல்போனை வைத்தும் விசாரித்து வருகிறார்கள். மீரா நேற்று யார்-யாருடன் போனில் பேசினார்? என்பது பற்றிய விவரங்களை சேகரித்து அதன் மூலமாக மன அழுத்தத்துக்கான காரணத்தை கண்டறிய திட்டமிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இந்த தற்கொலை சம்பவம் தமிழ் திரையுலகில் விஜய் ஆண்டனியின் நெருங்கிய நண்பர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரேத பரிசோதனைக்கு பிறகு மீராவின் உடல் விஜய் ஆண்டனியிடம் ஒப்படைக்கப்பட்டது.

    வைரலான விஜய் ஆண்டனி வீடியோ

    தற்கொலை குறித்து விஜய் ஆண்டனி பேசிய பழைய வீடியோக்கள் இன்று வைரலாகி வருகின்றன.

    அதில், 'எனக்கு 7 வயதாக இருக்கும்போது என் அப்பா தற்கொலை செய்து கொண்டார். கைக்குழந்தைகளை வைத்துக் கொண்டு என் தாய் பட்ட கஷ்டங்களால் அந்த வலி என்னவென்று எனக்கு நன்றாக தெரியும். நிறைய குழந்தைகளும் தற்கொலை எண்ணத்துடன் இருக்கிறார்கள். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மேல் அழுத்தம் கொடுக்கக் கூடாது. மற்றவர்கள் உங்கள் மீது அன்பு செலுத்த வேண்டும் என எதிர்பார்க்காமல் நீங்கள் உங்களை நேசியுங்கள்' என்று கூறி உள்ளார்.

    Next Story
    ×