search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலையில் நவீன முறையில் கால்வாய் அமைக்கும் பணி
    X

    தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலையில் நவீன முறையில் கால்வாய் அமைக்கும் பணி

    • புஷ் அண்ட் துரோ என்ற நவீன முறையில் அமைக்கும் பணி கடந்த இரண்டு மாதமாக நடைபெற்றது.
    • ஒரு கல்வெர்ட்டு 11 மீட்டர் நீளமும், 5 மீட்டர் அகலமும், 1.4 மீட்டர் உயரமும் கொண்டது.

    பூந்தமல்லி:

    பருவமழை தீவிரம் அடையும் போது போரூர் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தந்தி கால்வாய் மூலமாக வரும் தண்ணீர் காரணமாக அய்யப்பன் தாங்கல், பரணி புத்தூர், கொளுத்துவான்சேரி உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளில் தண்ணீர் தேங்குவது வழக்கம்.

    மழை காலத்தில் இப்பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதை யடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து மழை நீர் கால்வாய் அமைக்க உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து ரூ.100 கோடி செலவில் கட் அண்ட் கவர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று முடிந்தது. தற்போது தாம்பரம் - மதுரவாயல் நெடுஞ்சாலையை கடந்து மழை நீர் செல்ல வழி இல்லாததால் தாம்பரம் - மதுரவாயல் நெடுஞ்சாலையை ஏதும் உடைக்காமல் புஷ் துரோ முறையில் தாம்பரம் - மதுரவாயல் பைபாசின் கீழ் 54 மீட்டருக்கு கல்வெர்ட்டு கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று முடிந்தது.

    தற்போது அதே பகுதியில் மீண்டும் 56 மீட்டர் தூரத்துக்கு கல்வெர்ட் கால்வாயை புஷ் அண்ட் துரோ என்ற நவீன முறையில் அமைக்கும் பணி கடந்த இரண்டு மாதமாக நடைபெற்றது.

    இந்த முறையில் சாலையை உடைக்காமல் கல்வெர்ட்டு உள்ளே தரைக்கு கீழ் நுழைக்கப்படும். ஒரு கல்வெர்ட்டு 11 மீட்டர் நீளமும், 5 மீட்டர் அகலமும், 1.4 மீட்டர் உயரமும் கொண்டது.

    இந்த கல்வெர்ட்டின் மீது கனமான இரும்பு அமைக்கப்பட்டு கம்பரசர் மூலமாக அழுத்தம் கொடுத்து புஷ் துரோ முறையில் ஒன்றன்பின் ஒன்றாக செலுத்தப்படும். நாள் ஒன்றுக்கு 2 மீட்டர் மட்டுமே இதனை செலுத்த முடியும்.

    தற்போது வரை 56 மீட்டரில் சாலையின் நடுவே 44 மீட்டரும், சாலைக்கு வலது புறமும், இடது புறமும் தலா 6 மீட்டர் விட்டு புஷ் அண்ட் துரோ கல்வெர்ட்டு அமைக்கப்பட்டு உள்ளது. எதிர்காலத்தில் சாலை விரிவாக்க பணி நடந்தால் இந்த பகுதியில் கல்வெர்ட்டின் மீது சாலை அமைத்து கொள்ளலாம். இதற்காக இப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் இந்த பணிகளை கூடுதல் தலைமை செயலர் சந்திப் சந்தீப்சக் சேனா ஆய்வு மேற்கொண்டார். தற்போது முடிந்துள்ள பணிகளை விரைந்து முடித்து, இந்த பகுதியின் மேலே தார் சாலை அமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விரைந்து கொண்டு வர வேண்டும் என்று அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    ரெயில்வே துறையில் மட்டுமே சாத்தியமான பணியை தற்போது நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் வாகன போக்குவரத்து மிகுந்த தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சாலையை உடைக்காமலும் போக்குவரத்து தடை செய்யாமலும் தற்போது இந்த பகுதியில் புஷ் அண்ட் துரோ முறையில் கல்வெர்ட்டை அமைத்து சாதனை படைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×