search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குழந்தைகளின் பசியை போக்கிட எந்த தியாகமும் செய்ய தயார்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X

    குழந்தைகளின் பசியை போக்கிட எந்த தியாகமும் செய்ய தயார்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    • கல்வி மட்டும்தான் நம்மிடம் இருந்து யாரும் களவாட முடியாத சொத்தாகும்.
    • கல்வியை எந்த நாளும் கைவிட்டு விடக்கூடாது. அப்போது தான் தமிழ் சமுதாயம் முன்னேறும்.

    மதுரை:

    தமிழகத்தில் உள்ள 1 முதல் 5 வரையிலான அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை மதுரையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

    முன்னதாக மதுரை நெல்பேட்டையில் பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர் நெல்பேட்டையில் பள்ளி குழந்தைகளுக்கு உணவு தயாரிக்கும் கூடத்திற்கு சென்று பார்வையிட்டார். பள்ளிகளுக்கு உணவை கொண்டு செல்லும் வாகனங்களையும் கொடியசைத்து தொடங்கி வைத்த மு.க.ஸ்டாலின் காலை உணவு தொடக்க நிகழ்ச்சிக்காக மதுரை கீழஅண்ணா தோப்பு பகுதியில் உள்ள ஆதிமூலம் மாநகராட்சி பள்ளிக்கு சென்றார்.

    பள்ளியில் மாணவ-மாணவிகளுடன் அமர்ந்து மு.க.ஸ்டாலின் காலை உணவை சாப்பிட்டார். அப்போது காலை உணவாக கேசரி, ரவா கிச்சடி வழங்கப்பட்டது. இதனை ருசித்து சாப்பிட்ட மு.க.ஸ்டாலின் அருகே அமர்ந்து உணவு சாப்பிட்டு கொண்டிருந்த பள்ளி குழந்தைகளுக்கும் உணவை ஊட்டி மகிழ்ந்தார்.

    அப்போது குழந்தைகளிடம் உணவு ருசியாக இருக்கிறதா? என்று கேட்டார். குழந்தைகளும் நன்றாக இருப்பதாக தெரிவித்தனர். சிறப்பாக படித்து சமுதாயத்தில் பெரியவர்களாக உருவாக வேண்டும் என்று குழந்தைகளுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.

    பின்னர் நடந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    தமிழ் சமூகத்திற்கு நல்லதொரு மாற்றத்தை தரும் சிறப்பான தொடக்கமாக பள்ளி குழந்தைகளின் காலை உணவு திட்டம் அமைந்துள்ளது. இதனை செயல்படுத்தக்கூடிய இன்றைய நாள் எனது வாழ்விலே பொன்னாள் என்று சொல்லத்தக்க வகையில் அமைந்துள்ளது.

    பசித்த வயிறுக்கு உணவும், தவித்த வாய்க்கு தண்ணீரும், திக்கற்றவருக்கு திசை காட்டியாகவும் இருக்க வேண்டும். இன்று செயல்படுத்தப்பட்டுள்ள பள்ளி குழந்தைகளின் காலை உணவு திட்டம் கருணை வடிவிலான திட்டமாகும்.

    பசியோடு படிக்க வரும் குழந்தைகளுக்கு முதலில் உணவு வழங்கிய பிறகு வகுப்பறைக்கு செல்ல வசதியை ஏற்படுத்தி தந்துள்ளோம். தமிழகம் தற்போது நெல் தானிய உற்பத்தியில் உச்சத்தை கண்டுள்ளது.

    எனவே தான் நெல்பேட்டையில் காலை உணவுக்கான சமையல் கூடத்தை அமைத்து தயாரிக்கின்ற இந்த உணவு பள்ளி குழந்தைகளை தேடி செல்கிறது. சமுதாயத்தில் ஒடுக்கப்பட்டவர்களின் ஆதிமூலத்தை அறிந்து தீர்வுகாண வேண்டும் என்பதன் தொடக்கமாகத்தான் ஆதிமூலம் பள்ளியில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    இந்த பள்ளி அமைந்துள்ள இடம் கீழ அண்ணா தோப்பு. எவ்வளவு பொருத்தம் பாருங்கள். நாம் அனைவரும் அண்ணாவின் தம்பிகள். ஏழைகளுக்கு மலிவு விலையில் உணவு கிடைத்திட வழிவகை செய்தவர் பேரறிஞர் அண்ணா. அவரது பிறந்த நன்னாளில் காலை உணவுக்கான தயாரிப்பு கூடத்துக்கு உள்ளே சென்று பார்த்ததுடன் உணவு கொண்டு செல்லும் வாகனங்களையும் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளேன்.

    102 ஆண்டுகளுக்கு முன்பு திராவிட இயக்கத்தின் தாய் கழகமான நீதி கட்சியின் தலைவர் பி.டி.தியாகராயர் சென்னை மாநகராட்சி மேயராக இருந்தபோது ஆயிரம் விளக்கு பகுதியில் பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவு திட்டத்தை செயல்படுத்தினார். அதன் அடுத்த பரிணாம வளர்ச்சியாக தூங்கா நகரான மதுரையில் அந்த திட்டம் வளர்ச்சி அடைந்துள்ளது.

    குழந்தைகள் பசியை போக்கினால் குழந்தைகளின் கற்றல் திறன் அதிகரிக்கும். குழந்தைகளின் வருகையும் அதிகரிக்கும். கோவிட் தொற்று காலத்திற்கு பிறகு காலை உணவின் தேவை அதிகரித்துள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    திட்டத்தை தொடங்கி வைத்து குழந்தைகள் காலை உணவை ருசித்து சாப்பிடுவதை பார்க்கும்போது என் மனம் நிறைந்தது. இதயம் மகிழ்ச்சியால் திளைத்தது. ஏழை-எளிய, ஒடுக்கப்பட்ட குழந்தைகள் எந்த காரணத்திற்காகவும் பள்ளிக்கு செல்லாமல் இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் திராவிட இயக்கம் தொடங்கப்பட்டது.

    குழந்தைகள் படிக்க வறுமை, சாதி தடையாக இருக்கக்கூடாது என்று தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் ஆகியோர் நினைத்தார்கள். அவர்கள் வழியில் நான் செயல்படுத்தி வருகிறேன். நம் கையில் உள்ள இந்த ஆட்சியில் காப்பியத்தில் வருகின்ற மணிமேகலை கையில் உள்ள அமுதசுரபியாக நினைத்து கடும் நிதி சுமையிலும் இந்த திட்டத்தை நிறைவேற்றி வருகிறோம்.

    1922-ம் ஆண்டு நீதி கட்சி தலைவர் பி.டி. தியாகராயர் அவர்களால் மதிய உணவு திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அந்த திட்டம் நாடு விடுதலை பெறுவதற்கு முன்பு ஆங்கில அரசால் சில காரணங்களை சொல்லி நிறுத்தப்பட்டது. பின்னர் 1957-ம் ஆண்டு பெருந்தலைவர் காமராஜர் மதிய உணவு திட்டத்தை செயல்படுத்தினார்.

    1971-ம் ஆண்டு டாக்டர் கலைஞர் பள்ளி குழந்தைகளுக்கு பேபி ரொட்டி திட்டத்தை தந்ததுடன் குழந்தைகள், கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து உணவாக மாற்றித்தந்தார். 1975-ம் ஆண்டு முழுமையான மாநில அரசு நிதியுடன் ஊட்டச்சத்து சத்துள்ள உணவாக வழங்கப்பட்டது. மேலும் இந்த திட்டத்தை மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டமாக கூடுதல் நிதி ஒதுக்கி செயல்படுத்தினார்.

    1989-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் எம்.ஜி.ஆரின் சத்துணவு திட்டத்தை கலைஞர் நிறுத்தி விடுவார் என்று சிலர் பொய் பிரசாரம் செய்தார்கள். ஆனால் கலைஞர் நாங்கள் சத்துணவு திட்டத்தை நிறுத்த மாட்டோம், அந்த உணவை உண்மையான சத்துணவாக வழங்குவோம் என்றார்.

    அப்படியே வாரந்தோறும் ஒரு முட்டை வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து வாரத்தில் 2 நாட்கள் முட்டை வழங்கப்பட்டது. 2007-ம் ஆண்டு வாரந்தோறும் சத்துணவு 3 முட்டைகள் மற்றும் கொண்டைக்கடலை, பச்சை பயறு வழங்கப்பட்டன.

    2010-ம் ஆண்டு வாரத்தில் 5 நாட்கள் சனி, ஞாயிறு தவிர 5 முட்டைகள் வழங்கப்பட்டன. முட்டை சாப்பிடாதவர்களுக்கு வாழைப்பழம் வழங்கப்பட்டது. அதன்பின்னர் ஆட்சிக்கு வந்த அம்மையார் ஜெயலலிதா கலவை சாதமாக வழங்க உத்தரவிட்டார்.

    சென்னையில் உள்ள மாநகராட்சி மற்றும் அரசு பள்ளிகளுக்கு நான் ஆய்வுக்கு சென்ற நேரத்தில் படிக்கிற குழந்தைகளை நேரில் அழைத்து பேசுகின்ற வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர்கள் சோர்வாக இருப்பதற்கான காரணம் குறித்து கேட்டபோது காலையில் எப்போதும் சாப்பிடுவதில்லை என்று கூறினார்கள்.

    அது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இதுதொடர்பாக அதிகாரிகளிடம் ஆலோசித்தேன். அதிக குழந்தைகள் இப்படித்தான் சாப்பிடாமல் பள்ளிக்கு வருகிறார்கள் என்று அதிகாரிகளும் சொன்னார்கள். பட்டினியாக வரும் குழந்தைகளுக்கு எப்படி பாடம் படிக்க முடியும்? என்று உணர்ந்து தான் இந்த காலை உணவு திட்டம் செயல்படுத்த சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.

    தமிழகத்தில் இந்த திட்டத்தில் முதல் கட்டமாக 1 லட்சத்து 14 ஆயிரம் குழந்தைகள் பயனடைகிறார்கள். 1545 பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக ஒரு மாணவனுக்கு ரூ.12.75 செலவு செய்யப்படுகிறது. இதனை செலவு என்று சொல்வதைவிட தனது கடமை என்று சொல்வது தான் சாலப்பொருத்தமாகும்.

    இந்த திட்டம் இன்னும் முழுமையாக விரிவுப்படுத்தப்படும் என்று உறுதி அளிக்கிறேன். காலை உணவை இலவசம் என்றோ, சலுகை என்றோ, தர்மம் என்றோ நினைக்கக்கூடாது. இது நமது கடமை என்று நினைத்து கடமை உணர்வோடு குழந்தைகளின் அறிவாற்றலை உயர்த்த சிறப்பான கல்வியை கற்க நாம் அனைவரும் உறுதுணை செய்ய வேண்டும்.

    இதன் மூலம் இந்த சமூகம் அடையக்கூடிய பயன் என்பது அளவிடபட முடியாதது. கல்வி, மருத்துவம், பசி தீர்க்கும் திட்டங்கள் எவ்வித விமர்சனத்துக்கும் அப்பாற்பட்டதாகும். இதனை ஒரு ஆட்சியின் முகமாக பார்க்கவேண்டும். கலைஞரின் மகன் நான். கருணையின் வடிவமாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் அரசு பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு ஒரு வேண்டுகோளை தெரிவிக்க கடமைபட்டுள்ளேன்.

    இந்த திட்டத்தை தாய் உள்ளத்தோடு செயல்படுத்த வேண்டும். உங்கள் வீட்டு பிள்ளைகளை எவ்வளவு கனிவோடும், கவனத்தோடும் பார்த்து கொள்வீர்களோ அதைவிட கூடுதலான கவனத்தோடும், கனிவோடும் காலை உணவினை குழந்தைகளுக்கு வழங்க வேண்டும். கல்வி கற்கும் குழந்தைகளுக்கு காலை, மதியம் உணவை தருகிறோம். நீங்கள் எதை பற்றியும் கவலைப்படாமல் படியுங்கள்... படியுங்கள்... படியுங்கள்... இதுதான் எனது வேண்டுகோள் ஆகும்.

    கல்வி என்பது நாம் போராடி பெற்ற உரிமை ஆகும். கல்வி மட்டும்தான் நம்மிடம் இருந்து யாரும் களவாட முடியாத சொத்தாகும். இந்த சொத்தினை அடைய நீங்கள் கவனத்துடன் கல்வி கற்க வேண்டும். நீங்கள் படித்தால்தான் அறிவார்ந்த தமிழ் சமூகம் நீடித்து நிலைக்கும். படித்துதான் ஆக வேண்டுமா? இதை தான் படிக்க வேண்டுமா? என்று யாராவது கூறினால் அவர்களை முட்டாளாக பாருங்கள்.

    கல்வியை மட்டும் கற்காமல் விலகி சென்று விடாதீர்கள். கலை, ஆராய்ச்சி, பட்டப்படிப்புகளை படியுங்கள். நான் இருக்கிறேன். உங்களை கல்வியை விட்டு விலகி செல்ல அனுமதிக்க மாட்டேன். இதற்காகத்தான் தி.மு.க. அரசியல் களத்தில் இருக்கிறது.

    எனவே கல்வியை எந்த நாளும் கைவிட்டு விடக்கூடாது. அப்போது தான் தமிழ் சமுதாயம் முன்னேறும். அத்தகைய வளர்ச்சியை நோக்கி தமிழகம் எந்நாளும் வெற்றி நடைபோடவேண்டும். தமிழ் சமூகம் வறுமையில் இருந்து அகன்றிட குழந்தைகளின் பசியை போக்கிட எந்த தியாகத்தையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×