search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் தரிசன கட்டணம் ரூ.100 ஆக குறைப்பு- அமைச்சர் சேகர்பாபு
    X

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் தரிசன கட்டணம் ரூ.100 ஆக குறைப்பு- அமைச்சர் சேகர்பாபு

    • நல்ல பொருளாதார நிலையிலுள்ள சில கோவில்களில் முழுமையாக கட்டணத்தை ரத்து செய்கிறோம்.
    • நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் முழுமையாக சிறப்பு தரிசன கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து இன்று அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டு, அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பக்தர்கள் அதிகமாக வருகின்ற திருத்தலங்களில் அவர்கள் எளிய முறையில் தரிசனம் செய்திட ஏதுவாக கோவில்களுக்கு நேரடியாக சென்று கள ஆய்வு செய்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார். அதன்படி இன்றைக்கு பார்த்தசாரதி கோவிலில் 2.01.2023 அன்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும், நெரிசல் இல்லாமல் சுவாமி தரிசனம் செய்வதற்கு உண்டான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக ஆய்வு செய்தோம்.

    அந்த வகையில் கோவிலின் மாடவீதியை சுற்றி வாகனங்களை அனுமதிப்பது இல்லை என்றும், முக்கிய பிரமுகர்கள் மாட வீதியில் 50 மீட்டர் தூரம் நடந்து வந்து இறை தரிசனம் செய்வதற்கும், ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முதியோர் மற்றும் உடல் நலிவுற்றோருக்காக பேட்டரி கார் மற்றும் வீல் சேர்கள் கோவில் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் வரிசை முறையினை நீட்டித்து எவ்வித சச்சரவுமின்றி பக்தர்கள் அதிக அளவிற்கு விரைவில் தரிசனம் செய்திட திட்டமிட்டு இருக்கின்றோம்.

    வாகனத்தில் வருபவர்கள் தங்களது வாகனங்களை பி.வி.நாயகன் தெரு, எம்.கே.டி மேல்நிலைப்பள்ளி சாலை, பெசன்ட் ரோடு, சுங்குவார் தெரு ஆகிய இடங்களில் பார்க்கிங் செய்து கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. கோவில்களில் சிறப்பு தரிசன கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய நோக்கமிருந்தாலும், கோவில் பொருளாதார நிலை சூழ்நிலையை கருதி சிறப்பு தரிசன கட்டணங்களை படிப்படியாக குறைத்து வருகிறோம். நல்ல பொருளாதார நிலையிலுள்ள சில கோவில்களில் முழுமையாக அந்த கட்டணத்தை ரத்து செய்கிறோம். கடந்த 3 ஆண்டுகளாக பார்த்தசாரதி கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு தரிசனத்திற்கு ரூ.200 கட்டணம் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த முறை அக்கட்டணத்தை ரூ.100 ஆக குறைக்க உத்தரவிட்டிருக்கிறோம்.

    சிறப்பு தரிசன கட்டணத்தை பொறுத்தளவில் அவற்றை முழுமையாக ரத்து செய்ய படிப்படியாக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். ஏற்கனவே நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் முழுமையாக சிறப்பு தரிசன கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், துறைசார்ந்த அலுவலர்கள் கூட்டத்தில் எந்தெந்த கோவில்களில் சிறப்பு தரிசன கட்டணத்தை ரத்து செய்யலாம் என கருத்துரு கோரப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அந்தந்த கோவிலின் பொருளாதார சூழ்நிலைக்கேற்ப உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    சி.எம்.டி.ஏ.வை பொறுத்த அளவில் கடந்த ஆட்சியில் இருந்ததை விட இந்த ஆட்சியில் முழுமையாக தவறுகள் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கின்றன. தவறுகள் நடைபெறக்கூடாது என்பதற்காகத்தான் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்கின்றன.

    தற்போது செயல்பாட்டில் இருக்கின்ற நடைமுறையில் இன்னும் என்னென்னல்லாம் மாற்றங்களை செய்தால் விரைவாக பணிகள் நடைபெறுவதற்கு உதவியாக இருக்கும் என்பதை ஆலோசித்து அம்மாற்றங்களை செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், செயல் அலுவலர் கவெனிதா, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சார்லஸ் சாம் ராஜதுரை மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×