search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதான பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவு பெறும்- அமைச்சர் எ.வ.வேலு
    X

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதான பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவு பெறும்- அமைச்சர் எ.வ.வேலு

    • தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் கட்டுமான பணிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
    • தமிழர்களின் வீர விளையாட்டை அடையாளப்படுத்தவும், பெருமைப்படுத்தவும் இந்த விளையாட்டு மைதானம் கட்டப்பட்டு வருகிறது.

    அலங்காநல்லூர்:

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு மைதான பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழர்களின் வீர விளையாட்டின் அடையாளமான ஜல்லிக்கட்டுக்கு மைதானம் அமைய வேண்டும் என முதல்-அமைச்சர் சட்டசபையில் அறிவித்தபடி 66 ஏக்கர் பரப்பளவில் ரூ.44.6 கோடி மதிப்பீட்டில் திட்ட பணிகள் தொடங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகள் முழுவதுமாக நிறைவு பெறும். பணிகள் தொடங்கிய நாள் முதல் தொடர்ந்து 4-வது முறையாக மைதான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறேன்.

    இதுவரை 35 சதவீதம் பணிகள் முடிவு பெற்றுள்ளது. தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் கட்டுமான பணிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

    தற்போது மைதான நுழைவு வாயில் வளைவு, மழைநீர் வடிகால் வசதி, செயற்கை புல் தரை, குடிநீர் வசதி, 50 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டி, வீரர்கள், உரிமையாளர்கள் ஓய்வு ஆறை, மருத்துவ வசதி, கால்நடை மருத்துவ வசதி, உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.

    குறிப்பிட்ட நாளில் பணிகள் நிச்சயம் முடிவு பெறும். மைதானத்திற்கு விரைந்து வர புதிதாக சாலை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்காக ரூ.22 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இடையிடையே பாலங்கள் அமைக்கப்பட உள்ளது. அனைத்து பணிகளும் முழுமையாக முடிவு பெற்ற பின்னரே இந்த மைதானம் திறக்கப்படும். புதிய சாலை அமைக்கும்போது தனியார் நிலங்களும் கையகப்படுத்த வேண்டிய சூழல் உள்ளது. எனவே அதற்கான பணிகளும் விரைவில் நடைபெற உள்ளது.

    வழக்கம் போல் நடைபெறும் ஜல்லிக்கட்டுகள் ஆங்காங்கே வழக்கம்போல் நடக்கும். தமிழர்களின் வீர விளையாட்டை அடையாளப்படுத்தவும், பெருமைப்படுத்தவும் இந்த விளையாட்டு மைதானம் கட்டப்பட்டு வருகிறது. தி.மு.க. அரசை மக்கள் பாராட்டி கொண்டுதான் இருக்கிறார்கள். எதிர்க்கட்சிகள் விமர்சித்தால் அதைப்பற்றி எங்களுக்கு கவலை இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக இந்த ஆய்வின்போது மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலுவலர்கள், பணியாளர்கள் உடனிருந்தனர்.

    Next Story
    ×