என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 9,345 கன அடியாக அதிகரிப்பு
- பிலிகுண்டு, ஒகேனக்கல், கொளத்தூர், மேட்டூர் உள்ளிட்ட தமிழக எல்லை பகுதியில் மழை பெய்து வருகிறது.
- மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
சேலம்:
மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் டெல்டா பாசன பகுதிகளான சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கடலூர், நாகப்பட்டினம் ஆகிய 12 மாவட்டங்கள் பயன்பெறும்.
டெல்டா பாசனத்துக்காக கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. அணைக்கு நீர்வரத்து குறைந்தாலும் பாசனத்தின் தேவையை கருதி போதுமான அளவு தண்ணீர் மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்பட்டு வந்தது.
அணைக்கு வரும் தண்ணீரின் அளவு மிகவும் குறைந்ததால் அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 31 அடிக்கு கீழே சென்றது. இதனால் டெல்டா பாசனத்துக்காக அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் நேற்று முன்தினம் காலை 6 மணி அளவில் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து குடிநீர் தேவைக்காக மட்டும் வினாடிக்கு 500 கனஅடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் அங்குள்ள கிருஷ்ணராஜசாகர் அணை மற்றும் கபினி அணைகளில் இருந்து வினாடிக்கு 2,688 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
அதுபோல் பிலிகுண்டு, ஒகேனக்கல், கொளத்தூர், மேட்டூர் உள்ளிட்ட தமிழக எல்லை பகுதியில் மழை பெய்து வருகிறது.
இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,528 கன அடியாக வந்த நிலையில் இன்று 9,345 கன அடியாக அதிகரித்துள்ளது. மேலும் நீர்மட்டம் 33.10 அடியாகயும், நீர் இருப்பு 8.81 டி.எம்.சி. ஆகவும் உள்ளது.
நீர்வரத்து இதே நிலை தொடர்ச்சியாக நீடித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் மளமளவென உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.






