search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    புற்றுநோயில் இருந்து காப்பாற்றப்பட்ட பெண்ணை கணவனிடம் இருந்து பிரிக்க விரும்பவில்லை: ஐகோர்ட் அதிரடி
    X

    புற்றுநோயில் இருந்து காப்பாற்றப்பட்ட பெண்ணை கணவனிடம் இருந்து பிரிக்க விரும்பவில்லை: ஐகோர்ட் அதிரடி

    • திருமணத்துக்கு பின் தேவி அடுத்தடுத்து 4 முறை கர்ப்பம் அடைந்துள்ளார்.
    • நீ எனக்கு குழந்தை. நான் உனக்கு குழந்தை என்று கூறிய குமாரின் நல்ல மனதில் உறவினர்கள் யாரோ விஷத்தை ஏற்றியுள்ளனர்.

    சென்னை:

    நெல்லையைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி தேவி. (இருவரது பெயரும் மாற்றப்பட்டுள்ளது). இவர்களுக்கு கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த நிலையில் தேவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு நெல்லை குடும்பநல கோர்ட்டில் குமார் வழக்கு தொடர்ந்தார்.

    அதில், ''திருமணத்துக்கு முன்பே தேவிக்கு புற்றுநோய் இருந்தது. அதை மறைத்து என்னை திருமணம் செய்து கொண்டார். அதுமட்டுமல்ல, புற்றுநோய் பாதிப்பினால், அவரது கர்ப்பப்பையும் அகற்றப்பட்டு விட்டது. இதுபோன்ற செயல்கள் எல்லாம் என்னை கொடுமை செய்வதாகும். எனவே, எனக்கு விவகாரத்து வழங்க வேண்டும்'' என்று கூறியிருந்தார்.

    ஆனால், இந்த காரணத்துக்கு எல்லாம் விவாகரத்து வழங்க முடியாது என்று நெல்லை கோர்ட்டு தீர்ப்பு அளித்ததால், அதை எதிர்த்து ஐகோர்ட்டில் அவர் மேல்முறையீடு செய்தார்.

    இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் ஆர்.எம்.டி. டீக்காராமன், பி.பி.பாலாஜி ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் விசாரித்தது. பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    திருமணத்துக்கு பின் தேவி அடுத்தடுத்து 4 முறை கர்ப்பம் அடைந்துள்ளார். ஆனால், 4 முறையும் கரு கலைந்தது. இதனால் ஆஸ்பத்திரிக்கு சென்று பரிசோதித்த பின்னர்தான், அவர் புற்றுநோய் தாக்கி 3-வது கட்டத்தில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது உயிரை காப்பாற்ற கர்ப்பப்பை அகற்றப்பட்டுள்ளது.

    இவை எல்லாம் மனவேதனை தரும் கொடுமையாகும். அதே நேரம், இந்த காரணத்துக்காக விவாகரத்து வேண்டும் என்று குமார் கூறுவதை ஏற்க முடியாது. இவையெல்லாம் தேவி கணவனுக்கு கொடுத்த கொடுமை என்று சொல்ல முடியாது. 'எல்லாம் விதி' என்றுதான் சொல்ல வேண்டும்.

    நீ எனக்கு குழந்தை. நான் உனக்கு குழந்தை என்று கூறிய குமாரின் நல்ல மனதில் உறவினர்கள் யாரோ விஷத்தை ஏற்றியுள்ளனர். அதனால், இப்போது அவர் விவாகரத்து கேட்கிறார்.

    கடவுளால் காப்பாற்றப்பட்ட தேவியை அவரது கணவனிடம் இருந்து பிரிக்க நாங்கள் விரும்பவில்லை. அதனால், இவர்களுக்கு விவாகரத்து வழங்க முடியாது.

    இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    Next Story
    ×