என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு பட்டா வழங்கியதற்கு எதிர்ப்பு- அடிப்படை உரிமைகளை மீறிய செயல் என சென்னை ஐகோர்ட் கண்டனம்
- மூன்றாம் பாலினத்தவர்களுக்கு எதிராக மனுதாரர் வெறுப்புணர்வை கொண்டுள்ளார்.
- கிராம பஞ்சாயத்து தலைவர் தொடர்ந்த வழக்கின் விசாரணை ஆகஸ்டு 21ம் தேதிக்கு ஒத்திவைப்பு.
கடலூர் மாவட்டத்தில், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு பட்டா வழங்கியதை எதிர்த்து பஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று எடுத்துக் கொள்ளப்பட்டது.
கோரிக்கை மனு மீதான விசாரணையின் முடிவில், " இந்த விவகாரத்தில் கடலூர் மாவட்டம் நைனார்குப்பம் கிராம பஞ்சாயத்து தலைவர் நேரில் ஆஜராகும்படி", சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு எதிராக மனுதாரர் வெறுப்புணர்வை கொண்டுள்ளார் என்பது கோரிக்கை மனுவை பார்த்தாலே தெளிவாக தெரிகிறது எனவும், கிராம பஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றிய செயல், அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது மட்டுமல்லாமல், அடிப்படை உரிமைகளை மீறிய செயல் எனவும் உயர்நீதிமன்றம் காட்டமாக தெரிவித்துள்ளது.
இதைதொடர்ந்து, அரசு வழங்கிய பட்டா நிலத்தை ரத்து செய்ய கோரியும், ஆட்சியரிடம் வழங்கிய மனுவை பரிசீலிக்க கோரியும் கிராம பஞ்சாயத்து தலைவர் தொடர்ந்த வழக்கின் விசாரணை ஆகஸ்டு 21ம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.






