search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மாதவரம்-வேணுகோபால் நகர் இடையே சுரங்கம் தோண்டும் பணி முடிந்தது: எந்திரத்துக்கு உற்சாக வரவேற்பு
    X

    மாதவரம்-வேணுகோபால் நகர் இடையே சுரங்கம் தோண்டும் பணி முடிந்தது: எந்திரத்துக்கு உற்சாக வரவேற்பு

    • பூமிக்கு அடியில் 40 மீட்டர் ஆழத்துக்குள் நடந்த இந்த பணியில் சுமார் 1000 பணியாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.
    • சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்ட ஆனைமலை எந்திரம் அடுத்ததாக அயனாவரம் பகுதியில் சுரங்கம் தோண்ட பயன்படுத்தப்பட உள்ளது.

    சென்னை:

    சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்ட பணிகள் நடந்து வருகிறது. மொத்தம் 116.1 கிலோ மீட்டர் தூரத்துக்கு 3 வழித்தடங்களில் பாதைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் 43 கிலோ மீட்டர் தூரம் சுரங்கப்பாதையில் அமைகிறது.

    அதிலும் மாதவரம்-சிப்காட் தடத்தில் 26.7 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது.

    இந்த வழித்தடத்தில் முதல் சுரங்கம் தோண்டும் பணியை கடந்த அக்டோபர் மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    மாதவரத்தில் இருந்து வேணுகோபால் நகர் வரை 415 மீட்டர் தூரத்துக்கு சுரங்கம் தோண்டும் பணியை 'ஆனைமலை' என்று பெயரிடப்பட்ட எந்திரம் தொடங்கியது.

    பூமிக்கு அடியில் 40 மீட்டர் ஆழத்துக்குள் நடந்த இந்த பணியில் சுமார் 1000 பணியாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.

    கடந்த 4 மாதங்களாக பூமிக்கு அடியில் சுரங்கம் தோண்டப்பட்டது. 415 மீட்டர் தூரத்தையும் சுரங்கம் தோண்டிவிட்டு வேணு கோபால் நகரில் பூமியை துளைத்துக் கொண்டு வெளியே வந்த ஆனைமலை எந்திரத்தை அதிகாரிகளும், ஊழியர்களும் உற்சாகமாக வரவேற்றனர். அப்போது பலூன்களையும் பறக்க விட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

    இந்த வழித்தடத்தில் 2 பாதைகள் வேண்டுமென்பதால் கடந்த 5-ந் தேதி பால்பண்ணையில் இருந்து மற்றொரு சுரங்கம் தோண்டும் பணியை சேர்வராயன் என்ற எந்திரம் தொடங்கியது.

    இந்த எந்திரம் பணியை முடித்துவிட்டு வருகிற ஆகஸ்ட் மாதம் வேணுகோபால் நகரில் வெளியே வரும் என்று அதிகாரிகள் கூறினார்கள்.

    சுரங்கம் தோண்டும் பணியில் 23 எந்திரங்களை பயன்படுத்த திட்டமிட்டு இருப்பதாகவும், தற்போது 6 எந்திரங்கள் மட்டுமே சுரங்கம் தோண்டி கொண்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.

    2-ம் கட்ட மெட்ரோ வழித்தடத்தில் உயர்மட்ட ரெயில் பாதைக்கான கட்டுமான பணிகள் அடுத்த ஆண்டு (2024) முடிந்துவிடும். 2025-ம் ஆண்டில் இருந்து படிப்படியாக மெட்ரோ ரெயில் சேவை தொடங்கும். 2027-ம் ஆண்டுக்குள் உயர்மட்ட பாதைக்கான பணிகள் முழுவதுமாக முடிந்துவிடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தற்போது சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்ட ஆனைமலை எந்திரம் அடுத்ததாக அயனாவரம் பகுதியில் சுரங்கம் தோண்ட பயன்படுத்தப்பட உள்ளது.

    Next Story
    ×