search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருமணமான 3 நாளில் தம்பதி வெட்டிக்கொலை: மர்மகும்பல் வெறிச்செயல்
    X

    திருமணமான 3 நாளில் தம்பதி வெட்டிக்கொலை: மர்மகும்பல் வெறிச்செயல்

    • திருமணமாகி 3 நாட்களுக்கு பிறகு நேற்று காலையில் 2 பேரும் மாரிச்செல்வத்தின் வீட்டுக்கு வந்தனர்.
    • மாரிச்செல்வம், கார்த்திகா உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் வசந்தகுமார். இவர் தற்போது தூத்துக்குடி முருகேசன்நகர் 1-வது தெருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய மகன் மாரிச்செல்வம் (வயது 24). இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார்.

    இவருக்கும், தூத்துக்குடி திரு.வி.க. நகரை சேர்ந்த முத்துராமலிங்கம் மகள் கார்த்திகா (20) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. கார்த்திகா பட்டப்படிப்பு படித்து உள்ளார்.

    இவர்களின் காதல் விவகாரம் பெற்றோர்களுக்கு தெரியவந்தது. இதற்கு கார்த்திகா வீட்டில் எதிர்ப்பு கிளம்பியதாக கூறப்படுகிறது.

    கடந்த 30-ந்தேதி மாரிச்செல்வம், கார்த்திகாவை அழைத்து கொண்டு கோவில்பட்டிக்கு சென்று விட்டாா். அங்குள்ள கிழக்கு போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

    அதன்பின்னர் கோவில்பட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் 2 பேரும் பதிவு திருமணம் செய்து கொண்டனர். புதுமண தம்பதி கோவில்பட்டியிலேயே தங்கி இருந்தனர்.

    திருமணமாகி 3 நாட்களுக்கு பிறகு நேற்று காலையில் 2 பேரும் முருகேசன்நகரில் உள்ள மாரிச்செல்வத்தின் வீட்டுக்கு வந்தனர். அவரது பெற்றோர் வேலைக்கு சென்றுவிட்டதால் மாரிச்செல்வம், கார்த்திகா மட்டும் வீட்டில் தனியாக இருந்தனர்.

    மாலையில் 3 மோட்டார் சைக்கிள்களில் 6 பேர் கொண்ட மர்மகும்பல் வந்தது. அவர்கள் திடீரென வீட்டுக்குள் புகுந்து, அங்கு இருந்த மாரிச்செல்வம், கார்த்திகா ஆகிய 2 பேரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மர்ம கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டது.

    கண் இமைக்கும் நேரத்தில் அரங்கேறிய இந்த கொடூரக்கொலையால் அந்த பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்தது. அந்த பகுதி மக்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது 2 பேரும் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மாரிச்செல்வத்தின் குடும்பத்தினரும் 2 பேரின் உடல்களை பார்த்து கதறி அழுதனர்.

    இதுகுறித்து உடனடியாக சிப்காட் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    மாரிச்செல்வம், கார்த்திகா உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடியது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

    இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் கூறுகையில், 'புதுமண தம்பதியை கொலை செய்த, மர்மகும்பலை கைது செய்வதற்காக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. கொலையாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்' என்று தெரிவித்தார்.

    இந்த இரட்டைக்கொலை குறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மகும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள். காதல் திருமணம் செய்ததால் கார்த்திகாவின் உறவினர்கள் யாராவது இந்த கொலையை செய்தார்களா?, அல்லது வேறு யாரேனும் மர்மநபர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டார்களா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    தூத்துக்குடியில் காதல் திருமணம் செய்த புதுமண தம்பதி சரமாரி வெட்டிக்கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×