என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் பூட்டிகிடக்கும் கழிவறைகளால் வியாபாரிகள்-தொழிலாளர்கள் அவதி
    X

    கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் பூட்டிகிடக்கும் கழிவறைகளால் வியாபாரிகள்-தொழிலாளர்கள் அவதி

    • ஒரு நபருக்கு குளிப்பதற்கு கட்டணமாக ரூ.25 வசூல் செய்து வருகின்றனர் எனினும் முறையாக கழிப்பறைகள் பராமரிப்பு செய்யப்படாமல் உள்ளது.
    • பழம் மற்றும் காய்கறி மார்க்கெட் வளாகத்திற்குள் "மீன்பாடி" வண்டிகள் அதிகரித்து வருகிறது.

    ஆசியாவின் மிகப்பெரிய சந்தையான கோயம்பேடு மார்க்கெட் கடந்த 1996-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பூ, பழம், காய்கறி மார்க்கெட் மட்டுமே தொடங்கி செயல்பட்டு வந்த நிலையில் பின்னர் அதன் அருகிலேயே மளிகை மார்க்கெட்டும் தொடங்கப்பட்டது.

    இங்கு சுமார் 4ஆயிரம் கடைகள் உள்ளன. வியாபாரிகள் மொத்தமாகவும் சில்லரையிலும் காய்கறி மற்றும் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். தினசரி ரூ.30கோடி அளவிற்கு வர்த்தகம் நடந்து வருகிறது.

    இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் கோயம்பேடு சந்தைக்கு தினசரி லாரிகள் மூலம் காய்கறி மற்றும் பொருட்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சில்லரை வியாபாரிகள், மளிகை, காய்கறி கடைக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வந்து செல்கிறார்கள்.

    காய்கறிகள் வரத்து நள்ளிரவே வரத்தொடங்கி விடும் என்பதால் தினந்தோறும் நள்ளிரவு முதலே சந்தையில் வியாபாரம் தொடங்கி களை கட்டும்.

    மினி லாரி, ஆட்டோ, மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் வந்து குவிந்து மக்கள் இங்கிருந்து பொருட்களை வாங்கி செல்வது வழக்கம்.

    இதன் காரணமாக நள்ளிரவு தொடங்கி மதியம் வரை கோயம்பேடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மக்கள் நடமாட்டம் அதிகரித்து பரபரபாகவே காணப்படும்.

    காய்கறி, பழம் மற்றும் பூ மார்க்கெட்டில் மொத்தம் 20 நுழைவு வாயில்கள் உள்ளது. இதில் காய்கறி மார்கெட்டில் ஏ முதல் என் வரை 14 பிளாக்குகளும், பழ மார்க்கெட்டில் டிஏ முதல் டிஜி வரை 7 பிளாக்குகளும், பூ மார்க்கெட்டில் 4 பிளாக்குகளும் என மொத்தம் 25 பிளாக்குகள் உள்ளது. இதில் மொத்தம் 68 கழிவறைகள் செயல்பட்டு வருகிறது.

    கோயம்பேடு மார்க்கெட்டில் ஏராளமான வெளி மாவட்ட கூலி தொழிலாளர்கள் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் மார்க்கெட் வளாகத்தில் உள்ள கழிவறைகளை பயன்படுத்தி வருகிறார்கள்.

    ஆனால் இந்த கழிவறை முறையாக பராமரிப்பு இல்லாமல் காணப்படுகிறது. பல கழிவறைகள் ஆங்காங்கே பூட்டப்பட்டு கிடக்கின்றன. மேலும் பயன்பாட்டில் உள்ள கழிவறைகளும் முறையான பராமரிப்பு இல்லாமல் துர்நாற்றம் வீசி வருகிறது. தண்ணீரும் சரவர வருவதில்லை என்று தொழிலாளர்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள். இதனால் மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகள், தொழிலாளர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். கழிவறை அருகில் கடை நடத்தும் வியாபாரிகள் மற்றும் ஊழியர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

    மேலும் மார்க்கெட் வளாகம் முழுவதும் மாடுகள் ஹாயாக சுற்றி வருகின்றன. இதனால் சந்தைக்கு வரும் வியாபாரிகள், பொதுமக்கள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. எனவே மார்க்கெட் வளாகத்தில் பூட்டப்பட்டு கிடக்கும் கழிவறைகளை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும், கழிவறைகளை முறையாக பராமரித்து சுத்தம் செய்யவேண்டும். 24 மணிநேரமும் தண்ணீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வியாபாரிகள், தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இது தொடர்பாக மார்க்கெட்டில் தங்கி வேலை பார்த்து வரும் தொழிலாளர்கள் கூறும்போது, நாங்கள் மாலையில் பணி முடிந்து மார்க்கெட் வளாகத்தல் உள்ள கழிவறையில் குளிக்க செல்லும்போது பெரும்பாலான கழிவறைகளில் உள்ள குழாய்களில் தண்ணீர் சரியாக வருவது கிடையாது.

    ஒரு நபருக்கு குளிப்பதற்கு கட்டணமாக ரூ.25 வசூல் செய்து வருகின்றனர் எனினும் முறையாக கழிப்பறைகள் பராமரிப்பு செய்யப்படாமல் உள்ளது. இதனால் தொழிலாளர்கள் கழிவறைகளின் முன்பு நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை நீடிக்கிறது என்று வேதனையோடு தெரிவித்தனர்.

    வியாபாரிகள் கூறும்போது, கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் கழிவறை வசதி மோசமாக உள்ளது. இதனை முதலாவதாக சரிசெய்ய வேண்டும். கார்நடைகளும் காய்கறி கழிவுகளை சாப்பிட அதிக அளவில் சுற்றி வருகின்றன.

    மார்க்கெட்டில் சி.எம்.டி.ஏ மூலம் முறையாக ஒதுக்கீடு செய்யப்பட்ட கடைகளை தவிர்த்து மார்க்கெட் வளாகத்திற்குள் பல இடங்களில் தற்காலிக கடைகள் மற்றும் தள்ளுவண்டி கடைகள் மூலம் பூ, பழம், காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். இதேபோல் மார்க்கெட்டை ஒட்டி உள்ள சாலைகளில் பிளாட்பார கடைகள் மற்றும் தள்ளுவண்டி கடைகளில் ஒளி பெருக்கி வைத்து காய்கறி, பழங்கள் விற்பனை நடந்து வருகிறது. இதனால் தேவையற்ற போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதோடு மட்டும் இல்லாமல் மார்க்கெட்டில் கடை நடத்தி வரும் வியாபாரிகளுக்கும் விற்பனை பாதிக்கப்படுகிறது. இதனை அதிகாரிகள் முறைப்படுத்த வேண்டும்.

    பழம் மற்றும் காய்கறி மார்க்கெட் வளாகத்திற்குள் "மீன்பாடி" வண்டிகள் அதிகரித்து வருகிறது. நள்ளிரவு நேரத்தில் நடைபாதையை மறித்தபடி "மீன்பாடி" வண்டியை நிறுத்தி பொருட்களை ஏற்றி வருவதால் அவ்வப்போது தேவையற்ற நெரிசல் ஏற்படுகிறது. மார்க்கெட் வளாகம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் மாடுகளின் நடமாட்டமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அவ்வப்போது விபத்தும் ஏற்படுகிறது. இதை சி.எம்.டி.ஏ மற்றும் அங்காடி நிர்வாக குழு முறையாக கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    Next Story
    ×