search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    விபத்தில் சிக்கியவர் குணமடைய ஆடு பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்திய கிராம மக்கள்

    • தனியார் ஆம்புலன்ஸ் மூலமாக கவியரசன் அழைத்து வரப்பட்டார்.
    • கவியரசன் முழு உடல் தகுதியுடன் வர வேண்டும் என்று கண்ணீர் மல்க வேண்டிக்கொண்டனர்.

    பாப்பிரெட்டிப்பட்டி:

    பாப்பிரெட்டிப்பட்டி அருகே சாலை விபத்தில் சிக்கியவர் கோமா நிலையில் இருந்து மீண்டு முழு உடல் நலம் பெற வேண்டி கிராம மக்கள் அனைவரும் கூடி திருஷ்டி பரிகாரம் செய்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பே, தாதம்பட்டியை சார்ந்தவர் கவியரசன் (வயது 24). இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று சுஜி என்ற மனைவியும் உள்ளார்.

    இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 12-ந் தேதி கவியரசன் தனது உறவினர் வீட்டுக்குச் சென்று விட்டு தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பி வரும்போது, எதிர்பாராத விதமாக கோட்டைமேடு என்ற இடத்தில் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார்.

    ஆபத்தான நிலையில் தலையில் அடிபட்ட அவரை சிகிச்சைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் கடந்த 4 மாதங்களாக தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்நிலையில் திருமணம் ஆகி 3 ஆண்டுகளில் விபத்தில் சிக்கி தனது கணவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருவது அவரது மனைவி சுஜிக்கு பெருத்த மனவேதனை ஏற்படுத்தி உள்ளது.

    இதை தனது தாயிடம் வெளிப்படுத்தியுள்ளார். இதை அறிந்த சுஜியின் தாயார் தனது மருமகன் உடல் நலத்துடன் மீண்டு வர வேண்டும் என்றால் குலதெய்வத்திடம் நேர்த்திக்கடன் செலுத்தி ஆடிப் பண்டிகை என்பதால் அம்மனுக்கு பலியிட்டு திருஷ்டி கழித்தோம் என்றால் உடல் நலத்துடன் வருவார் என்று நம்பிக்கையூட்டியுள்ளார்.

    இதன் பேரில் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வரும் கவியரசனை மருத்துவமனையின் அனுமதியுடன் விபத்து நடந்த இடத்திற்கு ஆம்புலன்ஸ் மூலமாக வரவழைக்க முடிவு செய்தனர். அதன்படி சேலம் தனியார் ஆம்புலன்ஸ் மூலமாக கவியரசன் அழைத்து வரப்பட்டார்.

    விபத்து நடந்த கோட்டைமேடு பகுதியில் பே.தாதம்பட்டி கிராம மக்கள் ஒன்று கூடி அவர்களின் குலதெய்வமான காளியம்மன், வேடியப்பன் ஆகிய இரு தெய்வங்களையும் தேரில் அமர வைக்கப்பட்டு மிகவும் பயபக்தியுடன் பரிகார பூஜைகள் செய்து கிராம மக்கள் ஒன்று சேர்ந்து விபத்தில் சிக்கி காயம் அடைந்த கவியரசன் முன்பு ஆட்டு கிடா வெட்டி திருஷ்டி கழித்தனர்.

    அப்போது சக்தி வாய்ந்த காளியம்மன் மற்றும் வேடியப்பன் சாமியை விபத்தில் சிக்கி ஆபத்தான நிலையில் இருக்கும் கவியரசனை சுற்றி பல சுற்றுகள் சுற்றினர், பின்பு சாமி முன்பு கிராம மக்கள் ஒன்று கூடி மீண்டும் கவியரசன் முழு உடல் தகுதியுடன் வர வேண்டும் என்று கண்ணீர் மல்க வேண்டிக்கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சி அப்பகுதி வழியாக சென்று கொண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    Next Story
    ×