என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தமிழகத்தில் 900 தியேட்டர்களில் வெளியான லியோ: முதல் காட்சியை பார்ப்பதற்காக விடிய விடிய காத்திருந்த ரசிகர்கள்
- தமிழ்நாட்டில் அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
- குரோம்பேட்டையில் நள்ளிரவு 12 மணி முதல் ரசிகர்கள் வரிசையில் நின்றனர்.
சென்னை:
நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படம் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் அந்த படம் இன்று (வியாழக்கிழமை) வெளியானது.
நடிகர் விஜய்யுடன் திரிஷா, சஞ்சய்தத், அர்ஜூன், கவுதம் மேனன், மிஷ்கின் என்று நிறைய நட்சத்திர பட்டாளம் லியோ படத்தில் இடம் பெற்று உள்ளனர். இதன் காரணமாக தென் மாநிலங்கள் முழுக்க அந்த படத்துக்கு எதிர்பார்ப்பு நிலவியது.
நடிகர் விஜய் கடந்த சில மாதங்களாக மக்கள் இயக்கம் மூலம் நடத்தி வரும் சமூக சேவை பணிகள் அவரது அரசியல் வருகைக்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது. அவரது அதிரடி சேவைகள் தொடங்கப்பட்ட பிறகு வெளியாகும் முதல் படம் என்பதால் லியோ படத்தை பார்க்க விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி பொதுவான ரசிகர்களும் ஆர்வம் காட்டினார்கள்.
தமிழ்நாட்டில் அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. என்றாலும் கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, புதுச்சேரி மாநிலங்களில் அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனால் தமிழக ரசிகர்கள் இந்த மாநிலங்களுக்கு படையெடுத்து சென்று அதிகாலை 4 மணி காட்சியில் லியோ படத்தை கண்டு களித்தனர்.
ஏற்கனவே பல தியேட்டர்களில் லியோ படத்திற்கான ஒருவார காட்சிக்கு முன்பதிவு நிறைவு பெற்று இருந்தது. இன்று அந்த படத்தை பார்ப்பதற்கான டிக்கெட்டுகள் மட்டும் நேற்று விற்பனை செய்யப்பட்டன. இதனால் நேற்று தியேட்டர்களில் ரசிகர்கள் வெள்ளம் போல் திரண்டு இருந்தனர்.
நேற்று இரவே பல இடங்களில் தியேட்டர்களில் லியோ பட பேனர்கள் பிரமாண்டமாக வைக்கப்பட்டன. சில இடங்களில் கட்-அவுட் வைக்க தடை இருந்த போதிலும் ரசிகர்கள் தியேட்டர்களை அலங்கரித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தமிழகம் முழுவதும் லியோ படம் வெளியான அரங்குகளில் ரசிகர்களின் கொண்டாட்டம் கோலாகலமாக இருந்தது.
இன்று காலை 9 மணி காட்சியில் முதல் ஆளாக தியேட்டருக்கு சென்று பார்க்க வேண்டும் என்று விஜய் ரசிகர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவியது. இதற்காக நேற்று இரவே ரசிகர்கள் தியேட்டர் முன்பு நீண்ட வரிசையில் நிற்க தொடங்கி விட்டனர். குரோம்பேட்டையில் நள்ளிரவு 12 மணி முதல் ரசிகர்கள் வரிசையில் நின்றனர்.
கோயம்பேட்டில் இன்று அதிகாலை முதல் ரசிகர்கள் தியேட்டர் முன்பு திரண்டனர். இதனால் ரசிகர்களை கட்டுப்படுத்த அங்கு போலீசாரும், போக்குவரத்து போலீசாரும் குவிக்கப்பட்டனர். தமிழகம் முழுவதும் தியேட்டர்கள் முன்பு ரசிகர்கள் விடிய விடிய காத்திருந்ததை காண முடிந்தது.
இன்று காலை 6 மணிக்கெல்லாம் ரசிகர்கள் தியேட்டர்கள் முன்பு கொண்டாட்டத்தை தொடங்கி விட்டனர். நடிகர் ரஜினியின் ஹிட் பாடல்கள் ஒலிக்கப்பட்டன. அந்த பாடல்களை கேட்ட ரசிகர்கள் தியேட்டர் முன்பு நடனமாடி லியோவை வரவேற்கும் விதமாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரும்பாலான தியேட்டர்கள் முன்பு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மேள தாளத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. லியோ படம் பார்க்க வந்த ரசிகர்கள் மேள தாளத்துடன் வரவேற்கப்பட்டனர். அவர்களுக்கு இனிப்புகளும் வழங்கப்பட்டன.
லியோ படம் இன்று முதல் 5 காட்சிகள் திரையிட அரசு அனுமதி வழங்கி உள்ளது. 5 காட்சிகளுக்கும் டிக்கெட் முன்பதிவு நிறைவு பெற்று விட்டது. டிக்கெட் கிடைக்காத ரசிகர்கள் தியேட்டர் முன்பு டிக்கெட் வாங்குவதற்காக அலைந்ததை பார்க்க முடிந்தது.
அதே சமயத்தில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரியில் அதிகாலையிலேயே விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.






