search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கொடைக்கானலில் கடும் பனியின் தாக்கத்தால் பூங்காவில் கருகும் மலர் செடிகள்
    X

    கொடைக்கானலில் கடும் பனியின் தாக்கத்தால் பிரையண்ட் பூங்காவில் உள்ள மலர் செடிகள் கருகி வருகிறது.

    கொடைக்கானலில் கடும் பனியின் தாக்கத்தால் பூங்காவில் கருகும் மலர் செடிகள்

    • சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பும் இடங்களில் ஒன்றாக உள்ள பிரையண்ட் பூங்காவில் பனியின் தாக்கம் அதிகரித்துள்ளது.
    • பிரையண்ட் பூங்காவில் தற்போது சுற்றுலா பயணிகளிடம் ரூ.30 கட்டணமாக வசூல் செய்யப்பட்டு வருகிறது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் மலைப்பகுதியில் பகல் நேரங்களில் வெயிலும் மாலை நேரங்களில் கடும் குளிரும் நிலவி வருகிறது. மேலும் அதிகாலை வேளையில் உறைபனி காணப்படுகிறது.

    நடப்பாண்டில் வடகிழக்கு பருவமழை நன்கு பெய்ததால் தாமதமாக உறைபனி சீசன் தொடங்கியது. பகலில் அதிகபட்சமாக 18 டிகிரி செல்சியஸ், வெப்ப நிலையும், இரவில் குறைந்தபட்சமாக 7 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையும் காணப்படுகிறது. இதனால் நகரின் நீர்பிடிப்பு பகுதி தாழ்வான பகுதிகளில் உறைபனி காணப்படுகிறது.

    அப்சர்வேட்டரி, ஏரிச்சாலை, ரோஜா பூங்கா உள்ளிட்ட நகரின் உயரமான பகுதிகளிலும் வெண்போர்வை போர்த்தியதுபோல உறைபனி காணப்படுகிறது.

    சுற்றுலாப்பயணிகள் அதிகம் விரும்பும் இடங்களில் ஒன்றாக உள்ள பிரையண்ட் பூங்காவிலும் பனியின் தாக்கம் அதிகரித்துள்ளது. இங்கு நடவு செய்யப்பட்ட மலர் நாற்றுகள் தற்போது கருகி வருகிறது. தொடர்ந்து தற்போது நடவு செய்யப்பட்ட நாற்றுக்கள் மட்டுமே உள்ளது.

    கொடைக்கானலில் இடைவிடாது கொட்டி வரும் குளிர் காரணமாக சொட்டர், கம்பளி ஆடைகளை அணியாமல் யாரும் தெருவில் நடமாட முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. வரும் நாட்களில் வறண்ட வானிலை நீடிக்கும் என்பதால் கொடைக்கானலில் மேலும் சில நாட்கள் பனியின் தாக்கம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பிரையண்ட் பூங்காவில் தற்போது சுற்றுலாப் பயணிகளிடம் ரூ.30 கட்டணமாக வசூல் செய்யப்பட்டு வருகிறது.

    சுற்றுலா பயணிகள் காண்பதற்கு மலர்களே இல்லாததால் அவர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர். மேலும் அடிப்படை வசதியான கழிப்பறை வசதி, முறையான பராமரிப்பு இல்லாத நிலையில் கட்டணம் வசூலிப்பதை அவர்கள் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

    எனவே மலர்கள் இன்றி இருக்கும் பனிக்காலத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் எனவும், சுற்றுலா பயணிகளுக்கு போதிய அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×