என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

விபத்துக்கு காரணமான அரசு பஸ்சையும், கார் தீப்பிடித்து எரிவதையும் காணலாம்.
உசிலம்பட்டியில் அரசு பஸ் மோதி தீப்பிடித்து எரிந்த கார்- கேரள குடும்பம் உயிர் தப்பியது
- கார் உசிலம்பட்டி-மதுரை மெயின்ரோட்டில் உள்ள மின்வாரிய அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தது.
- பஸ் மோதியதில் நிதீஷ், மனைவி மற்றும் மகள் ஆகிய 3 பேர் மட்டுமின்றி, இருசக்கர வாகனத்தில் வந்த முருகன், பால்பாண்டி உள்ளிட்டோரும் காயமடைந்தனர்.
உசிலம்பட்டி:
கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர் நிதீஷ். இவர் தனது மனைவி கீது (வயது 33), மகள் நீத்தா(10) ஆகியோருடன் மதுரைக்கு காரில் வந்திருந்தார். பின்பு இன்று காலை அவர்கள் 3 பேரும் காரில் கேரளாவுக்கு திரும்பி சென்றனர்.
அவர்களது கார் உசிலம்பட்டி-மதுரை மெயின்ரோட்டில் உள்ள மின்வாரிய அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக உசிலம்பட்டியில் இருந்து மதுரை நோக்கி சென்ற அரசு பஸ் எதிரே வந்தது.
அந்த பஸ் திடீரென எதிரே வந்த இருசக்கர வாகனம் மற்றும் கேரள குடும்பத்தினர் சென்ற கார் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த உசிலம்பட்டி அருகே உள்ள பூதிப்புரம் கிராமத்தை சேர்ந்த முருகன், பால்பாண்டி ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.
கேரள குடும்பத்தினர் சென்ற கார், பஸ் மோதிய வேகத்தில் ரோட்டிற்கு வெளியே சென்றுவிட்டது. இந்தநிலையில் அவர்களது கார் திடீரென தீப்பிடிக்க தொடங்கியது. காரில் இருந்து குபுகுபுவென புகை வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த நிதீஷ் தனது மனைவி மற்றும் மகளுடன் வேகவேகமாக காரில் இருந்து வெளியே வந்தார.
அவர்கள் வெளியே வந்த சிறிது நேரத்தில் கார் முழுவதும் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இந்த விபத்து குறித்து போலீஸ் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். தீப்பிடிக்க தொடங்கியதும் நிதீஷ், மனைவி மற்றும் மகள் ஆகிய 3 பேரும் உடனடியாக வெளியே வந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
பஸ் மோதியதில் நிதீஷ், மனைவி மற்றும் மகள் ஆகிய 3 பேர் மட்டுமின்றி, இருசக்கர வாகனத்தில் வந்த முருகன், பால்பாண்டி உள்ளிட்டோரும் காயமடைந்தனர். அவர்கள் 5 பேரும் சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து தொடர்பாக உசிலம்பட்டி டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






