search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ராசிபுரம் அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கருப்பனார் கோவில் விழா 46 கிடாக்களை வெட்டி விருந்து
    X

    ராசிபுரம் அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கருப்பனார் கோவில் விழா 46 கிடாக்களை வெட்டி விருந்து

    • மலைவாழ் மக்கள் இக்கோவில் உள்ள கள்ளவழி கருப்பனாரை வழிபட்டு வருகின்றனர்.
    • 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள், சிறுவர்கள், நீண்ட வரிசையில் நின்று அசைவ சமபந்தி விருந்தை சாப்பிட்டனர்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை அருகே ஆர்.புதுப்பட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற கள்ளவழி கருப்பனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் தை மாதம் கடைசி வார ஞாயிறு அன்று, முப்பூஜை திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    போதமலை அடிவாரத்தில் இக்கோவில் உள்ளது. மலைவாழ் மக்கள் இக்கோவில் உள்ள கள்ளவழி கருப்பனாரை வழிபட்டு வருகின்றனர். இந்த விழாவில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்வர். மலைவாழ் குடும்பத்தினர் தான் பூசாரியாகவும் உள்ளனர்.

    விழாவையொட்டி, நேற்று இரவு கள்ளவழி கருப்பனாருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. முதலில் பூசாரிகள் பொங்கல் வைத்து பூஜை செய்தார். அதன்பிறகு கோவில் முன்பு ஆடுகளை வெட்டி பலியிட்டனர். அடுத்து, ஆடு, கோழி, பன்றி ஆகியவை பலியிட்டு முப்பூஜை செய்யப்பட்டது. இவ்விழாவில் 46-க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டன.

    பலியிட்ட ஆடுகளை அதிகாலை வரை சமைத்து ஆண்களுக்கு பரிமாறப்பட்டது. சுமார் 2500 கிலோ இறைச்சி சமைத்து, பச்சரிசி பொங்கலுடன் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.

    இதில் கலந்து கொண்ட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள், சிறுவர்கள், நீண்ட வரிசையில் நின்று அசைவ சமபந்தி விருந்தை சாப்பிட்டனர்.

    இது குறித்து விழாக்குழுவினர் மக்கள் நோய்நொடி நீங்குவதுடன், விவசாயம் செழிக்கவும். குடும்ப பிரச்னைகள் தீரவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும் பரம்பரை பரம்பரையாக இந்தவிழாவை நாங்கள் நடத்தி வருகிறோம் என்றனர்.

    Next Story
    ×