search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மின்வாரியத்துக்கு கருவிகள் வாங்கியதில் முறைகேடு புகார்: சென்னையில் 40 இடங்களில் வருமானவரி சோதனை
    X

    மின்வாரியத்துக்கு கருவிகள் வாங்கியதில் முறைகேடு புகார்: சென்னையில் 40 இடங்களில் வருமானவரி சோதனை

    • தேனாம்பேட்டை வெங்கடரத்தினம் சாலையில் உள்ள மின்வாரிய அதிகாரி காசியின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை
    • புரசைவாக்கத்தில் வசித்து வரும் மகேந்திர ஜெயின் என்கிற தொழில் அதிபர் வீட்டிலும் சோதனை நடைபெற்றது

    தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கீழ் எண்ணூர், வடசென்னை, தூத்துக்குடி, மேட்டூர் உள்ளிட்ட இடங்களில் அனல்மின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த அனல்மின் நிலையங்களில் நிலக்கரியை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நிலக்கரியை எடுத்துச் செல்ல பெரிய கன்வேயர் பெல்ட்டுகள் பயன்படுத்தப் பட்டு வருகின்றன. இதேபோன்று மேலும் பல உபகரணங்களும் மின் உற்பத்திக்கான பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.

    இந்த அனல்மின் நிலையங்களுக்கு கன்வேயர் பெல்ட் உள்பட மின் உற்பத்தி பொருட்களை 4 நிறுவனங்கள் தயார் செய்து வழங்கி வருகின்றன. இதில் சென்னையை தலைமையிடமாக கொண்டு ஒரு நிறுவனமும் பொன்னேரியை தலைமையிடமாக கொண்டு ஒரு நிறுவனமும் செயல்பட்டு வருகின்றன. இது தவிர மற்ற 2 நிறுவனங்களும் சென்னையிலேயே செயல்பட்டு வருகின்றன.

    இந்த நிறுவனங்கள் தமிழ்நாடு மின்வாரியத்துக்கு தேவையான பொருட்களை சப்ளை செய்ததில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக வருமானவரித் துறையினருக்கு பல்வேறு புகார்கள் வந்தன.

    இதையடுத்து இந்த 4 நிறுவனங்களின் செயல்பாடுகளையும் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

    இதில் 4 நிறுவனங்களும் போலியாக ரசீதுகளை உருவாக்கி வரி ஏய்ப்பில் ஈடுபட்டது கண்டறியப்பட்டதாக தெரிகிறது.

    இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் சோதனை நடத்த வருமான வரித்துறையினர் முடிவு செய்தனர்.

    இதன்படி மேற்கண்ட நிறுவனங்களுக்கு சொந்தமான 40 இடங்களில் இன்று வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சென்னை மற்றும் புறநர் பகுதிகளில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அலுவலகங்கள் மற்றும் மின் வாரியத்துக்கு பொருட்களை சப்ளை செய்யும் ஒப்பந்ததாரர்களின் அலுவலகங்கள், வீடு உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.

    சென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல் நீலாங்கரை, எண்ணூர், நாவலூர், செங்கல்பட்டு, தி.நகர், எருக்கஞ்சேரி, எம்.ஜி.ஆர். நகர், ஜாபர்கான் பேட்டை, துரைப்பாக்கம், பொன்னேரி உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

    இந்த நிறுவனங்களில் சோதனை நடத்துவதற்காக வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று 40-க்கும் மேற்பட்ட வாகனங்களை பதிவு செய்து வைத்திருந்தனர். இன்று அதிகாலையில் கார்களில் அணி வகுத்த வருமான வரித்துறை அதிகாரிகள் பின்னர் தனித்தனியாக பிரிந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

    சோதனையின்போது மின்வாரியத்துக்கு கன்வேயர் பெல்ட் மற்றும் கேபிள் உள்ளிட்ட பொருட்களை சப்ளை செய்ததில் எந்த மாதிரியான முறைகேடுகள் நடைபெற்று உள்ளன? என்பது பற்றி இந்த சோதனையின்போது வருமான வரித்துறை அதிகாரிகள் அலசி ஆராய்ந்தனர். இதில் முறைகேடு தொடர்பாக பல்வேறு ஆவணங்கள் சிக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    தமிழ்நாடு மின்வாரியத்துக்கு சப்ளை செய்யப்பட்ட உபகரணங்கள் மூலமாக போலியான கணக்குகளை காட்டி வரிஏய்ப்பு நடைபெற்றிருப்பதாக கூறப்படும் நிலையில் அது தொடர்பான ஆவணங்களும் சோதனையில் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    சென்னையை அடுத்த சிறுசேரி, சிப்காட் வளாகத்திலும் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான அலுவலகத்தில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    பொன்னேரி வெள்ளி வாயல் சாவடியில் செயல்பட்டு வரும் சென்னை ராதா என்ஜினீயரிங் ஒர்க்ஸ் நிறுவனம் மற்றும் சென்னையை மையமாக கொண்டு செயல்படும் பந்தாரி குரூப், இண்டர்வேஸ் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. புரசைவாக்கம் பிரிக்ளின் சாலையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் மகேந்திர ஜெயின் என்கிற தொழில் அதிபர் வீட்டிலும் சோதனை நடைபெற்றது.

    சென்னை தேனாம்பேட்டை வெங்கடரத்தினம் சாலையில் உள்ள மின்வாரிய அதிகாரி காசியின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    அனல்மின் நிலையங்களில் பயன்படுத்தப்படும் கன்வேயர் பெல்ட் உள்பட பொருட்களை வாங்கியது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

    சேலம் மாவட்டம் மேட்டூர் அனல் மின்நிலையத்திற்கு இன்று காலை வருமான வரித்துறையை சேர்ந்த 5 அதிகாரிகள் திடீரென சென்றனர். பின்னர் அவர்கள் அனல் மின்நிலையத்தில் உள்ள அலுவலகத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.

    அனல் மின்நிலையத்துக்கு கொள்முதல் செய்யப்பட்ட மின் உபகரணங்கள் தரமானதா என்றும் அவற்றின் விலை குறித்தும் வருமான வரித்துறையினர் ஆவணங்களை கைப்பற்றியும் விசாரித்து வருகிறார்கள். மேலும் ஒப்பந்தப் பணியாளர்கள் நியமிக்காமல் சம்பளம் ஒதுக்கி முறைகேடு நடந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. அது தொடர்பாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    இதேபோன்று வடசென்னை மற்றும் தூத்துக்குடி அனல்மின் நிலையங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் முற்றுகையிட்டு அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த அனல்மின் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட பொருட்கள் பற்றிய விவரங்களை கேட்டு அது தொடர்பான ஆவணங்களை பார்த்து சோதனை நடத்தி வருகிறார்கள்.

    சென்னையில் இருந்து சென்ற 15 அதிகாரிகள் கொண்ட குழுவினர் தூத்துக்குடி அனல்மின் நிலையத்திற்குள் சென்றனர். முதலில் அவர்கள் அங்கு உள்ள தொழிற்சாலை பகுதிக்கு சென்றனர். அங்குள்ள ஒப்பந்ததாரர் மற்றும் அனல்மின் நிலைய அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அதில் இருந்து ஒரு குழுவினர் பிரிந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கும் சோதனை நடத்த சென்றனர். இதனால் அனல் மின்நிலையத்தின் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    இந்த சோதனையின் முடிவில் அங்கு என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன? எந்த மாதிரியான முறை கேடுகள் நடந்துள்ளன என்பது பற்றிய விவரங்கள் தெரிய வரும்.

    Next Story
    ×