என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

டாஸ்மாக் லாரி ஒப்பந்ததாரர் சச்சிதானந்தம் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட காட்சி.
டாஸ்மாக் லாரி ஒப்பந்ததாரரை விசாரணைக்கு அழைத்து சென்ற அதிகாரிகள்
- சச்சிதானந்தம் சமீபத்தில் 150 சரக்கு வாகனங்களை வாங்கியதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
- சச்சிதானந்தம் வீட்டில் இருந்து கணக்கில் வராத ரூ.2 கோடியே 10 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டதாக வருமானத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு:
ஈரோடு திண்டல் சக்தி நகர் 3-வது கிராசை சேர்ந்தவர் சச்சிதானந்தம் (65). இவர் 300-க்கும் மேற்பட்ட லாரிகள் மற்றும் சரக்கு வாகனங்களில் குறிப்பிட்ட மதுபான நிறுவனங்களில் இருந்து மதுபாட்டில்களை கொண்டு வந்து குடோன்கள் மற்றும் கடைகளுக்கு சப்ளை செய்யும் ஒப்பந்தம் எடுத்து உள்ளார்.
இந்த நிலையில் இவர் சமீபத்தில் 150 சரக்கு வாகனங்களை வாங்கியதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த 26-ந் தேதி முதல் இவரது வீடு மற்றும் செங்கோடம்பாளையத்தில் உள்ள இவரது டிரான்ஸ்போர்ட் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் இவரது வீட்டில் இருந்து கணக்கில் வராத ரூ.2 கோடியே 10 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டதாக வருமானத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து இன்று 4-வது நாளாகவும் அவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே சோதனை நடத்த வந்த அதிகாரிகளின் ஒரு பிரிவினர் டாஸ்மாக் லாரி ஒப்பந்ததாரர் சச்சிதானந்தத்தை விசாரணைக்காக அழைத்து சென்றனர். இதுப்பற்றி வருமான வரித்துறை வட்டாரத்தில் கேட்டபோது வங்கி கணக்குகள் மற்றும் வங்கி லாக்கர்களை ஆய்வு செய்ய அழைத்து சென்று இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அவரிடம் எங்கு விசாரணை நடத்தப்படுகிறது? எந்த வங்கிக்கு அவரை அழைத்து செல்கிறார்கள் என்று எந்த விபரமும் வெளியிடவில்லை.






