search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அஸ்தினாபுரத்தில் மர்ம காய்ச்சல் பரவுவதால் மக்கள் பீதி: குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    அஸ்தினாபுரத்தில் மர்ம காய்ச்சல் பரவுவதால் மக்கள் பீதி: குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு

    • மழைக்காலங்களில் தண்ணீர் கால்வாயில் செல்லாமல் குடியிருப்புகளில் தேங்கும் நிலை காணப்படுகிறது.
    • 4-வது தெருவில் மட்டும் பெயரளவுக்கு கால்வாயை தூர் வாரி சென்றுள்ளனர் என்று குற்றம் சாட்டினர்.

    தாம்பரம் மாநகராட்சி 38-வது வார்டுக்குட்பட்ட அஸ்தினாபுரம் மற்றும் மகேஸ்வரி நகரில் 7 தெருக்கள் உள்ளன. இங்கு 130 வீடுகள் உள்ளன.

    இந்த குடியிருப்புகளில் உள்ள தெருக்களில் இருந்து வெளியேறும் மழைநீர் 4-வது தெரு வழியாக சென்று அங்குள்ள ரேஷன் கடையையொட்டியுள்ள காய்வாய் வழியாக ஓடி செம்பரம்பாக்கம் ஏரியை சென்றடையும். இந்த கால்வாய் மற்றும் தண்ணீர் சென்று சேரும் இடம் ஆகியவை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் கால்வாயில் செல்லாமல் குடியிருப்புகளில் தேங்கும் நிலை காணப்படுகிறது.

    ஒவ்வொரு ஆண்டும் மழைக் காலங்களில் இந்த பிரச்சினை ஏற்படுவதால் வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்னரே மகேஸ்வரி நகரில் உள்ள கால்வாயை தூர்வார வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறும்போது, எங்கள் பகுதியில் உள்ள தெருக்களிலும் கால்வாய்கள் தூர் வாரப்படாமலேயே உள்ளது.

    4-வது தெருவில் மட்டும் பெயரளவுக்கு கால்வாயை தூர் வாரி சென்றுள்ளனர் என்று குற்றம் சாட்டினர்.

    அப்பகுதியில் உள்ள சிறுவர் பூங்காவில் குப்பைகள் அதிக அளவில் கொட்டி வைக்கப்பட்டுள்ளது.

    கழிவு நீரும் தேங்கி நிற்கிறது. 2 மாதங்களுக்கும் மேலாக குப்பைகள் தேங்கி கழிவு நீரும் கலந்துள்ளதால் அஸ்தினாபுரம் பகுதியில் மர்ம காய்ச்சல் வேகமாக பரவுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.

    தேங்கி கிடக்கும் குப்பை மற்றும் கழிவு நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி கொசு தொல்லையும் அதிகரித்துள்ளது என்றும் மக்கள் புகார் தெரிவித்து உள்ளனர். 50-க்கும் மேற்பட்டவர்கள் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் காய்ச்சலை கட்டுப்படுத்தவும், சுகாதார சீர்கேட்டை சரி செய்யவும் தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

    இதற்கிடையே ஒரு குழந்தைக்கு மஞ்சள் காமாலை நோயும் ஏற்பட்டுள்ளது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு மாநகராட்சி மண்டல அதிகாரிகள் விரைந்து சென்று அஸ்தினாபுரத்தில் நிலவும் சுகாதார சீர்கேட்டை போக்குவதற்கு நிரந்தர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    Next Story
    ×