என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ரூ.6,000 கோடி நிதி நிறுவன மோசடி- ஐ.எப்.எஸ். இயக்குனர்களின் உறவினர் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை
    X

    சத்துவாச்சாரியில் உள்ள ஐ.எப்.எஸ். நிதி நிறுவன இயக்குனர்களின் உறவினர் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்திய காட்சி.

    ரூ.6,000 கோடி நிதி நிறுவன மோசடி- ஐ.எப்.எஸ். இயக்குனர்களின் உறவினர் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை

    • ஐ.எப்.எஸ். நிறுவன இயக்குனர் லட்சுமி நாராயணன், ஜனார்த்தனன், வேத நாராயணன், மோகன் பாபு ஆகியோர் வெளிநாடுகளுக்கு தப்பி சென்று விட்டனர்.
    • ஐ.எப்.எஸ். இயக்குனர்களின் உறவினர்கள் வீடுகளில் இன்று காலை அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

    வேலூர்:

    வேலூர் காட்பாடியை தலைமை இடமாகக்கொண்டு ஐ.எப்.எஸ். நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது.

    இந்த நிறுவனத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதந்தோறும் ரூ.8,000 வரை வட்டியாக பணம் தருவதாக அறிவிப்பு வெளியானது.

    இதற்காக அந்த நிறுவனம் வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் ஏஜெண்டுகளை நியமித்தது. ஏஜென்டுகள் மூலம் பொதுமக்களிடம் இருந்து பல ஆயிரம் கோடி பணத்தை வாரி குவித்தது.

    குறிப்பிட்ட காலம் வரை பொதுமக்களுக்கு வட்டி பணம் வழங்கிய நிதி நிறுவனம் திடீரென பணம் தராமல் நிறுத்தியது.

    இது குறித்து புகாரின் பேரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணையில் இறங்கினர். வட மாவட்டங்களில் ஐ.எப்.எஸ். நிறுவனம் பொதுமக்களிடமிருந்து ரூ. 6,000 கோடி வரை மோசடி செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

    ஐ.எப்.எஸ். நிறுவன இயக்குனர் லட்சுமி நாராயணன், ஜனார்த்தனன், வேத நாராயணன், மோகன் பாபு ஆகியோர் வெளிநாடுகளுக்கு தப்பி சென்று விட்டனர். அவர்கள் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் முக்கிய ஏஜெண்டுகள் 6 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து பணம், கார்கள் மற்றும் அசையா சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் ஐ.எப்.எஸ். இயக்குனர்களின் உறவினர்கள் வீடுகளில் இன்று காலை அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

    வேலூர், சத்துவாச்சாரி, வள்ளலாரில் உள்ள ஐ.எப்.எஸ். நிறுவன இயக்குனர்களின் உறவினர் வீட்டிற்கு காலை 9 மணிக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்தனர். அவர்களுடன் வங்கி அதிகாரிகள் சிலரும் வந்திருந்தனர்.

    ஐ.எப்.எஸ். நிறுவனத்தில் இருந்து பல கோடி பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர்களது உறவினர்கள் வீடுகளில் ஆவணங்களை கைப்பற்றி அதன் மூலம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தினர்.

    அமலாக்கத்துறை சோதனையால் அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    இதே போல் செங்குட்டை பகுதியில் உள்ள நிதி நிறுவன இயக்குனரின் உறவினர் வீட்டில் அமலாக்கத்துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தினர்.

    நெமிலியை சேர்ந்த ஏஜெண்டு ஒருவரது வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடந்தது.

    இந்த சம்பவத்தால் வேலூரில் இன்று காலை பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    நிதி நிறுவனத்தில் லட்சக்கணக்கான பணத்தை முதலீடு செய்த பொதுமக்கள் பணம் திரும்ப கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் திரும்ப கிடைக்க நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்

    Next Story
    ×