search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இளம்பெண் கொலை கள்ளத்தொடர்பை கைவிடாததால் தீர்த்துக்கட்டினேன்-ஆட்டோ டிரைவர் பரபரப்பு வாக்குமூலம்
    X

    இளம்பெண் கொலை கள்ளத்தொடர்பை கைவிடாததால் தீர்த்துக்கட்டினேன்-ஆட்டோ டிரைவர் பரபரப்பு வாக்குமூலம்

    • போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஷெகனாஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • படுகொலை சம்பவம் தாதகாப்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சேலம்:

    சேலம் தாதகாப்பட்டிசஞ்சீவிராயன்பேட்டை மாரியம்மன் கோவில் 4-வது வீதியை சேர்ந்தவர் மாதேஸ்வரன் (வயது 48). ஆட்டோ டிரைவர். இவரது முதல் மனைவி மகாலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் மாதேஸ்வரன், சேலம் ஜவுளி கடை பஸ் நிறுத்தம் பகுதியில் தனியார் டைல்ஸ் கடையில் வேலை செய்தபோது, அங்கு உடன் வேலை செய்த ஷெகனாஷ் (42) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. ஏற்கனவே ஷெகனாஷ் திருமணம் ஆகி கணவரை பிரிந்து மகளுடன் வசித்து வந்தார்.

    இந்நிலையில் கள்ளக்காதல் விவகாரம் வெளியே தெரியவரவே மாதேஸ்வரன், ஷெகனாஷை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். முதல் மனைவி மற்றும், குழந்தைகளை பிரிந்து அவர், ஷெகனாசுடன் தாகூர் தெரு பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குடும்பம் நடத்தி வந்தார்.

    இந்நிலையில் நேற்று மாதேஸ்வரன் திடீரென ஷெகனாஷின் கழுத்தில் துண்டால் இறுக்கி அவரை துடிக்க துடிக்க கொலை செய்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த அன்னதானப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஷெகனாஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து வழக்குப்பதிவு செய்து, ஆட்டோ டிரைவர் மாதேஸ்வரனை போலீசார் கைது செய்தனர்.

    விசாரணையில், 2-வது மனைவியை கொன்றது ஏன்? என்பது குறித்து அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் விபரம் வருமாறு:

    திருமணம் ஆன பிறகு நானும், ஷெகனாசும் தாகூர் தெரு பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து ஒன்றாக குடும்பம் நடத்தி வந்தோம். சில மாதங்களுக்கு முன்பு ஷெகனாஷின் நடத்தையில் மாற்றங்கள் தெரிந்தது.

    இதனால் சந்தேகம் அடைந்த நான், அவரை கண்காணித்து வந்தேன். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் ஷெகனாஷூக்கு கள்ளத்தொடர்பு இருப்பது தெரியவந்தது.

    இதனால் நான், ஷெகனாஷை கண்டித்தேன். இருப்பினும் அவர் அந்த வாலிபருடன் கள்ளத்தொடர்பை கைவிடாமல் தொடர்ந்து பழகி வந்ததாக தெரிகிறது.

    இது தொடர்பாக நேற்று எனக்கும் ஷெகனாசுக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த நான், துண்டால் ஷெகனாஷின் கழுத்தை சுற்றி இறுக்கினேன். இதில் வலியால் அலறி துடித்த ஷெகனாஷ் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர்.

    இதையடுத்து நான் அங்கிருந்து சேலம் பழைய பஸ் நிலையம் பகுதியில் வசித்து வரும் அவரது மகள் வீட்டிற்கு சென்று, உனது தாயை கொலை செய்துவிட்டதாக தெரிவித்தேன். இதனால் அவரது மகள் கதறி அழுதார். பின்னர் நான் அங்கிருந்து தப்பிச் சென்று இரவு அன்னதானப்பட்டி போலீசில் சரண் அடைந்தேன்.

    இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக தெரிகிறது.

    கைது செய்யப்பட்ட மாதேஸ்வரனை ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய பிறகு நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி, ஜெயிலில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த படுகொலை சம்பவம் தாதகாப்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×