search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குற்றாலம் அருவிகளில் இரவில் திடீர் வெள்ளப்பெருக்கு- இன்று காலை முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
    X

    இன்று அதிகாலை மெயினருவியில் ஆர்ச்சை தொட்டபடி தண்ணீர் விழுந்ததையும், ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்ததையும் காணலாம்.

    குற்றாலம் அருவிகளில் இரவில் 'திடீர்' வெள்ளப்பெருக்கு- இன்று காலை முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

    • நேற்று இரவு மாவட்டம் முழுவதும் பரவலாக சாரல் மழை பெய்தது.
    • மெயினருவியில் ஆர்ச்சை தொட்டபடியும், ஐந்தருவியில் அனைத்து கிளைகளிலும் தண்ணீர் கொட்டியது.

    தென்காசி:

    தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு ஏற்கனவே தொடங்கிய நிலையிலும், தென்மாவட்டங்களில் இதுவரை பருவக்காற்று மட்டுமே வீசி வருகிறது.

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் இருந்தே தென்மேற்கு பருவமழை பெய்யத்தொடங்கிவிடும். ஆனால் ஜூலை மாதம் தொடங்கிய பின்னரும் மழைக்கான அறிகுறியே இல்லை. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் கலக்கம் அடைந்துள்ளனர்.

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அவ்வப்போது சாரல் மழை பெய்வதால் குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் குறைந்த அளவில் தண்ணீர் கொட்டியது. எனினும் குறைவாக கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்காக சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பழைய குற்றாலம் அருவியில் பாறைகள் மட்டுமே காட்சியளித்தது.

    இந்நிலையில் நேற்று இரவு மாவட்டம் முழுவதும் பரவலாக சாரல் மழை பெய்தது. இதனால் குளிர்ந்த சூழ்நிலை நிலவியது. நள்ளிரவில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழையின் காரணமாக மெயின் அருவி, ஐந்தருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.

    ஒருகட்டத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை விதித்தனர். நேற்று விடுமுறை தினம் என்பதால் இரவு நேரத்தில் ஏராளமானோர் குளிப்பதற்காக வந்திருந்தனர். ஆனால் வெள்ளப்பெருக்கு காரணமாக அவர்களை போலீசார் அனுமதிக்கவில்லை. மெயினருவியில் ஆர்ச்சை தொட்டபடியும், ஐந்தருவியில் அனைத்து கிளைகளிலும் தண்ணீர் கொட்டியது.

    இந்நிலையில் இன்று காலை 2 அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு குறைந்ததால், சுற்றுலா பயணிகள் மீண்டும் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனால் அவர்கள் மகிழ்ச்சியுடன் அருவிகளில் குளித்தனர். இந்த ஆண்டு சீசன் இதுவரை களைகட்டவில்லை என்ற ஏக்கம் வியாபாரிகள் மனதிலும், சுற்றுலா பயணிகள் மனதிலும் உள்ள நிலையில் இனியாவது அருவிகளில் தொடர்ந்து தண்ணீர் கொட்ட வேண்டும் என்று அவர்கள் ஏக்கத்துடன் உள்ளனர்.

    தென்காசி மாவட்டத்தில் ஆய்க்குடியில் 10 மில்லிமீட்டரும், தென்காசி, செங்கோட்டையில் தலா 3 மில்லிமீட்டரும், கருப்பாநதி அணை பகுதியில் 6 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. குண்டாறில் 4.4 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக அடவிநயினார் அணை பகுதியில் 32 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் மணிமுத்தாறு அருவி, பாபநாசம் அகஸ்தியர் அருவிகளில் தொடர்ந்து தண்ணீர் கொட்டி வருகிறது. அங்கும் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் சென்று குளித்து மகிழ்கின்றனர். மாவட்டத்தில் அணை பகுதிகளில் லேசான மழை பெய்தது. இன்று காலை நிலவரப்படி பாபநாசத்தில் 8 மில்லிமீட்டரும், சேர்வலாறு அணை பகுதியில் 4 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. மணிமுத்தாறு அணை பகுதியில் 3.5 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

    Next Story
    ×