என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பழைய காயல்-புல்லாவழி பகுதியில் உப்பளங்கள் மழைநீரில் மூழ்கி கிடக்கும் காட்சி.
தூத்துக்குடியில் கனமழை: தண்ணீரில் மூழ்கிய உப்பளங்கள்
- தூத்துக்குடி புதுக்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளது.
- பொதுவாக ஒரு ஆண்டில் ஜனவரி மாதம் தைப்பொங்கலோடு உப்பு உற்பத்தி சீசன் தொடங்கும்.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் கடலோர பகுதிகளில் நேற்று நள்ளிரவு சாரலாக தொடங்கிய மழை திடீரென கனமழையாக மாறி சுமார் 2 மணி நேரம் பலமாக பெய்தது. மழை தொடர்ந்து விட்டுவிட்டு பெய்து வருகிறது.
இதனால் தூத்துக்குடி புதுக்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளது. தூத்துக்குடி கடலோர பகுதிகளை ஒட்டி உள்ள உப்பளங்களில் இன்று காலையும் தொடர்ந்து மழை பெய்தது. திடீர் மழையால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தூத்துக்குடி முத்தையாபுரம், முள்ளக்காடு கோவளம் கடற்கரை, புல்லாவழி, பழைய காயல் ஆகிய பகுதிகளில் உள்ள உப்பளங்களில் மழை நீர் தேங்கி கிடக்கிறது. பல இடங்களில் மழை நீர் உப்பளங்களில் உள்ள வரப்பு தெரியாத வகையில் நிரம்பி நிற்கிறது. இந்தப் பகுதியில் மீண்டும் உப்பு உற்பத்தி தொடங்குவது நீண்ட காலமாகும் என்பதால் ஆயிரக்கணக்கான உப்பள தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
பொதுவாக ஒரு ஆண்டில் ஜனவரி மாதம் தைப்பொங்கலோடு உப்பு உற்பத்தி சீசன் தொடங்கும். அதேப்போல ஆண்டின் இறுதியில் நவம்பர் மாதத்துடன் மழைக்காலம் தொடங்குவதால் உப்பு உற்பத்தி நிறுத்தப்படும். இது வாடிக்கையான ஒன்று.
இந்த திடீர் மழையால் தூத்துக்குடியில் இனி உப்பு உற்பத்தி தொடங்குவது மழை பெய்வதை பொறுத்துதான் அமையும் என்று உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.






