என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சேலத்தில் நேற்று பெய்த மழையால் பழைய பஸ் நிலையம் பகுதியில் உள்ள சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீர்.
சூறாவளி காற்றுடன் பலத்த மழை: சேலம் மாநகரில் 30 நிமிடத்தில் 5.6 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது
- சேலம் மாநகரில் நேற்றிரவு 7 மணியளவில் இடி, மின்னலுடன் மழை தொடங்கியது.
- வீடுகளுக்குள் சாக்கடை நீர் கலந்த தண்ணீர் புகுந்ததால் துர்நாற்றம் வீசியதால் இரவு முழுவதும் தூங்க முடியாமல் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.
சேலம்:
தமிழகம் முழுவதும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக சேலம் மாவட்டத்தில் 2-வது நாளாக நேற்றிரவு கன மழை பெய்தது.
சேலம் மாநகரில் நேற்றிரவு 7 மணியளவில் இடி, மின்னலுடன் மழை தொடங்கியது. இந்த மழை 8 மணி வரை தூறலாக நீடித்தது. பின்னர் 8 மணி முதல் 8.30 மணி வரை கன மழையாக கொட்டியது. அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, ஜங்சன், கொண்டலாம்பட்டி உள்பட பல பகுதிகளிலும் இந்த மழை கன மழையாக பெய்தது. இடி, மின்னலுடன் திடீரென பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. பெரும்பாலான பகுதிகளில் சாக்கடை நீருடன் மழை நீரும் கலந்து சாலைகளில் ஆறாக ஓடியது. சேலம் மாநகரில் 30 நிமிடத்தில் 5.6 செ.மீ மழை கொட்டியது.
குறிப்பாக கிச்சிப்பாளையம் நாராயணன் நகர், கருவாட்டு பாலம், பச்சப்பட்டி, தாதகாப்பட்டி, நெத்திமேடு, அம்மாப்பேட்டை ஜெயா தியேட்டர் பகுதி, அத்வைத ஆசிரம ரோடு, பெரமனூர் நாராயணபிள்ளை தெரு, 4 ரோடு, 5 ரோடு, உள்பட பல பகுதிகளில் சாலைகளில் மழை நீருடன் சாக்கடை நீரும் கலந்து ஆறாக ஓடியது. இதனால் வேலைக்கு சென்று வீடுகளுக்கு திரும்பியவர்கள் கடும் அவதி அடைந்தனர்.
இதற்கிடையே இந்த பகுதிகளில் சாலைகள் மற்றும் தெருக்களில் மழைநீருடன் கலந்து ஓடிய சாக்கடை நீர் 100-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் அந்த தண்ணீரை பொதுமக்கள் பாத்திரங்கள் மூலம் எடுத்து அப்புறப்படுத்தினர். மேலும் வீடுகளுக்குள் சாக்கடை நீர் கலந்த தண்ணீர் புகுந்ததால் துர்நாற்றம் வீசியதால் இரவு முழுவதும் தூங்க முடியாமல் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.
இதே போல சேலம் பழைய பஸ் நிலையம், கடை வீதி, புதிய பஸ் நிலையம் உள்பட பல பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் பயணிகளும், பொதுமக்களும் தவியாய் தவித்தனர். கனமழை பெய்தபோது சேலம் மாநகரில் பெரும்பாலான பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. இதனால் மக்கள் கடும் அவதிப்பட்டனர். மழையை தொடர்ந்து மாநகரில் குளிர்ந்த காற்று வீசியதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.
இதே போல சேலம் புறநகர் பகுதிகளான வீரகனூர், ஓமலூர், தம்மம்பட்டி, கரியகோவில் அயோத்தியாப்பட்டணம் உள்பட பல பகுதிகளில் சூறைக்காற்றுடன் கன மழை கொட்டியது. மேலும் இடி, மின்னலுடன் பெய்த இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஏற்காட்டில் நேற்றிரவு 8 மணி முதல் 8.30 மணி வரை சாரல் மழை பெய்தது. இந்த மழையை தொடர்ந்து ஏற்காட்டில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.
சேலம் மாவட்டத்தில் அதிகபட்சமாக சேலம் மநாகரில் 56 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. வீரகனூர் 45, ஓமலூர் 43, தம்மம்பட்டி 28, கரியகோவில் 17, தலைவாசல் 7, ஏற்காடு 6.2 , கெங்கவல்லி 5, ஆத்தூர் 3, ஆனைமடுவு 3 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 213.20 மி.மீ. மழை பெய்துள்ளது.






