search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பழவேற்காடு-காட்டுப்பள்ளி சாலையில் ½ கிலோ மீட்டர் மணலால் மூடப்பட்டது: போக்குவரத்து முற்றிலும் நிறுத்தம்
    X

    பழவேற்காடு-காட்டுப்பள்ளி சாலையில் ½ கிலோ மீட்டர் மணலால் மூடப்பட்டது: போக்குவரத்து முற்றிலும் நிறுத்தம்

    • வாகன ஓட்டிகள் பொன்னேரி-மீஞ்சூர் வழியாக சுமார் 40 கிலோ மீட்டர் தூரம் சுற்றி சென்று வருகிறார்கள்.
    • 95 சதவீதம் மணல்கள் அகற்றப்பட்டு உள்ள நிலையில் இன்று முழுவதும் அகற்றப்படும் என்று தெரிகிறது.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த பழவேற்காடு-காட்டுப்பள்ளி சாலை வழியாக அதானி துறைமுகம் மற்றும் காட்டுப் பள்ளி கப்பல் கட்டும் தளம், எண்ணூர் துறைமுகம் , நிலக்கரி சேமிப்பு கிடங்கு வடசென்னை அனல் மின் நிலையம், எண்ணூர் திருவொற்றியூர் சாலை உள்ளிட்ட பகுதிகளுக்கு பழவேற்காடு வாகனங்கள் சென்று வருகின்றன. அதிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையை சுற்று வட்டார பகுதி மக்களும் பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வரும்.

    கடந்த வாரத்தில் மிச்சாங் புயல் காரணமாக பெய்த கனமழை மற்றும் சூறைக்காற்றால் கடல் அரிப்பு ஏற்பட்டு கடலில் இருந்து மணல் முழுவதும் பழவேற்காடு-காட்டுப்பள்ளி செல்லும் சாலையில் படர்ந்தது. சுமார் அரை கிலோமீட்டர் தூரம் சாலையே தெரியாத அளவுக்கு மணல் திட்டுக்களாக காட்சி அளிக்கிறது.

    இதனால் அந்த சாலையில் வாகன போக்குவரத்து கடந்த ஒரு வாரமாக முற்றிலும் நிறுத்தப்பட்டு உள்ளன. வாகன ஓட்டிகள் பொன்னேரி-மீஞ்சூர் வழியாக சுமார் 40 கிலோ மீட்டர் தூரம் சுற்றி சென்று வருகிறார்கள்.

    மணலால் மூடப்பட்ட சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து தாங்கல் பெரும்புலம் ஊராட்சி தலைவர் ஞானவேல் தலைமையில் 2 ஜே.சி.பி. எந்திரங்கள் மூலம் சாலையை மூடிய மணல் திட்டுக்கள் அகற்றப்பட்டு வருகிறது.

    இதனை மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜ் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 95 சதவீதம் மணல்கள் அகற்றப்பட்டு உள்ள நிலையில் இன்று முழுவதும் அகற்றப்படும் என்று தெரிகிறது. நாளைக்குள் பழவேற்காடு-காட்டுப்பள்ளி சாலையில் வழக்கம்போல் வாகன போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    Next Story
    ×