search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்- டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
    X

    பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்- டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

    • 6 மாநிலங்களில் நடைமுறைப் படுத்தப்படும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழ்நாட்டில் ஏன் செயல்படுத்த முடியாது?
    • இதுவரை நடைமுறைப் படுத்தப்படாத நிலையில், இனியாவது தாமதிக்காமல் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்புவரை பழைய ஓய்வூதியத் திட்டம் என்பது சாத்தியமற்ற ஒன்று என்ற பிம்பம் தான் கட்டமைக்கப்பட்டிருந்தது.

    பழைய ஓய்வூதியத் திட்டத்தை எந்த காலத்திலும் செயல்படுத்த முடியாது. பழைய ஓய்வூதியத் திட்டம் என்பது பேசுவதற்கு இனிப்பாக இருக்கும். நடைமுறைப் படுத்துவதற்கு மிகவும் கசப்பானதாக இருக்கும் என்பது தான் பொருளாதார வல்லுனர்களின் கருத்தாக இருந்தது.

    ஆனால், அதையெல்லாம் முறியடித்து ராஜஸ்தான் மாநிலம் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தியது.

    அதைத் தொடர்ந்து சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பஞ்சாப், இந்த மாநிலங்களுக்கு முன்பே மேற்குவங்கம் என 5 மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.

    இந்த பட்டியலில் ஆறாவது மாநிலமாக இமாச்சலப்பிரதேசம் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது.

    இமாச்சல சட்டப் பேரவைத் தேர்தலின் போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்திருந்தது.

    அதன்படியே ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் முதல் அறிவிப்பாக பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்திருக்கிறது.

    இந்தியாவின் 6 மாநிலங்களில் நடைமுறைப் படுத்தப்படும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழ்நாட்டில் ஏன் செயல்படுத்த முடியாது?

    பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழ்நாடு தான் நாட்டிற்கே முன்னோடியாக இருந்திருக்க வேண்டும்.

    ஆனால், அந்த வாய்ப்பை தமிழகம் இழந்துவிட்டது. இதுவரை நடைமுறைப் படுத்தப்படாத நிலையில், இனியாவது தாமதிக்காமல் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×