என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

விபத்தில் பஸ்சின் முன் பகுதி சேதமானதை காணலாம்.
கோபிசெட்டிபாளையம் அருகே அரசு பஸ்-வேன் நேருக்கு நேர் மோதி விபத்து: 10 பேர் காயம்
- அரசு பஸ் அந்தியூர் வழியாக கோபிசெட்டி பாளையத்துக்கு வந்து கொண்டு இருந்தது.
- பஸ்சில் வந்த பயணிகள் 5 பேரும், வேனில் வந்த தொழிலாளர்கள் 5 பேர் என 10 பேர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
கோபி:
சேலம் மாவட்டம் எடப்பாடியில் இருந்து ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்துக்கு ஒரு அரசு பஸ் வந்தது.
இந்த பஸ்சை சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தை சேர்ந்த தங்கராசு என்பவர் ஓட்டி வந்தார். கண்டக்டராக ரத்தினசேகர் என்பவர் இருந்தார். பஸ்சில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
இந்த நிலையில் அரசு பஸ் அந்தியூர் வழியாக கோபிசெட்டி பாளையத்துக்கு வந்து கொண்டு இருந்தது. பஸ் கோபி செட்டிபாளையம் அடுத்த கவுண்டன்புதூர் என்ற பகுதியில் இரவு 9 மணிக்கு வந்தது.
அப்போது எதிரே ஒரு தனியார் கம்பெனியின் வேன் தொழிலாளர்களை ஏற்றி கொண்டு வந்தது. இதையடுத்து அரசு பஸ் கவுண்டன்புதூரில் வளைவில் திரும்பியபோது எதிர்பாராதவிதமாக அரசு பஸ் மற்றும் வேன் நேருக்கு நேர் மோதியது.
இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி நொறுங்கியது. மேலும் வேனின் முன் பகுதியும் சேதமானது. இதை கண்ட பயணிகள் மற்றும் தொழிலாளர்கள் அலறி துடித்தனர். இதில் பஸ்சில் வந்த பயணிகள் 5 பேரும், வேனில் வந்த தொழிலாளர்கள் 5 பேர் என 10 பேர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் கோபிசெட்டிபாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இதனால் அந்த பகுதியில் சிறுது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






