என் மலர்
தமிழ்நாடு
கோகுல்ராஜ் கொலை வழக்கு: திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயிலுக்கு சென்று ஆய்வு செய்ய நீதிபதிகள் முடிவு
- சுவாதி மீது உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பதிவு செய்தது.
- பிறழ் சாட்சியாக மாறிய சுவாதி மீதான குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சென்னை:
கோகுல்ராஜ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட யுவராஜ் உள்ளிட்ட 10 பேர், தண்டனையை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். நீதிபதிகள் எம்எஸ். ரமேஷ், ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு விசாரித்து வருகிறது. விசாரணையின்போது, முக்கிய சாட்சியான சுவாதியிடம், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் உள்ள சிசிடிவி வீடியோ காட்சிகளை ஒளிபரப்பி விளக்கம் கேட்டனர். அப்போது சுவாதி முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார். விசாரணை நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் மாற்றி மாற்றி பேசியதாக அவர் மீது நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பதிவு செய்தது.
இரு நீதிபதிகளும் சென்னையில் இருப்பதால் இந்த வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தி்ல் நடைபெறுகிறது.
பிறழ் சாட்சியம் அளித்ததாக பதிவு செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கின் விசாரணைக்காக சுவாதியின் கணவர் ஆஜராகியிருந்தார். சுவாதி கர்ப்பமாக இருப்பதால் அவரால் ஆஜராக முடியவில்லை என தெரிவிக்கப்பட்டது.
அப்போது, பிறழ் சாட்சியாக மாறிய சுவாதி மீதான குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதற்கான மெமோ சுவாதியின் கணவரிடம் கொடுக்கப்பட்டது.
மேல்முறையீட்டு வழக்கில் கோகுல்ராஜின் தாயார் தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், யுவராஜ் உள்ளிட்ட மனுதாரர்கள் தரப்பு பதில் வாதத்துக்காக விசாரணை ஜனவரி 20ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
கோகுல்ராஜ் கடைசியாக இருந்ததாக கூறப்படும் திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயிலுக்கு நேரில் சென்று ஆய்வு செய்யவும் நீதிபதிகள் முடிவு செய்துள்ளனர். கோகுல்ராஜ், சுவாதி இருவரும் கோயிலுக்குள் செல்லும் காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. வெளியே வரும் காட்சி பதிவாகவில்லை. எனவே, கோயிலின் அமைப்பை புரிந்துகொள்ளவும், கோயிலின் உள்ளே வரும் வழி, வெளியே வரும் வழி குறித்து புரிந்துகொள்வதற்காகவும் ஜனவரி 22ம் தேதி நேரில் செல்ல உள்ளதாக நீதிபதிகள் கூறினர்.