என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மக்களுக்கு தேவையான மசோதாக்களை கவர்னர் நிறைவேற்ற வேண்டும்: ஜி.கே.வாசன்
- மேட்டூர் பாசனம் மூலம் சம்பா சாகுபடி பொய்த்து போன நிலையில் அந்த பகுதிகளை வறட்சி பகுதியாக அறிவிக்க வேண்டும்.
- சமூக விரோதிகளை தமிழக அரசு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.
திருச்சி:
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திருவண்ணாமலை மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பேட்டை விரிவாக்கத்திற்காக அரசை எதிர்த்து போராடிய விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டர் சட்ட வழக்குகளை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். மேட்டூர் பாசனம் மூலம் சம்பா சாகுபடி பொய்த்து போன நிலையில் அந்த பகுதிகளை வறட்சி பகுதியாக அறிவிக்க வேண்டும்.
நடைபெற இருக்கிற பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தேர்தல் கூட்டணி குறித்து சரியான வியூகத்தை அமைக்கும். சமூக விரோதிகளை தமிழக அரசு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.
தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய பல்வேறு திட்டங்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் உள்ளார். மக்களுக்கு தேவையான மசோதாக்களை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நிறைவேற்ற வேண்டும். அரசு பஸ்ஸில் படிக்கட்டில் பயணம் செய்த மாணவன் தவறி விழுந்து தனது கால்களை இழந்த சம்பவம் வருத்தம் அளிக்கிறது. எனவே அனைத்து அரசு பஸ்களிலும் கதவு அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.






