என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஜி-20 மாநாடு எதிரொலி: நெல்லையில் 2 லட்சம் மண் ஹாட்பாக்ஸ்கள் தயாரிப்பு விறுவிறுப்பு

    • பொங்கல் மண்பானைகள், அடுப்புகள் ஆகியவை தயாரிக்கும் பணி குறிச்சி பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • மலேசியாவிற்கு அனுப்புவதற்காக 3 லிட்டர், 2.5 லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 ஆயிரம் மண்பானைகள் தயாரித்துள்ளோம்.

    நெல்லை:

    நெல்லை மேலப்பாளையம் குறிச்சியில் மண் பானைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள பானைகள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு செல்வது மட்டுமின்றி மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    ஜி-20 மாநாடு அடுத்து ஆண்டு இந்தியாவில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் உலகில் பல்வேறு நாடுகளில் இருந்தும் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். இதற்கான பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் ஜி20 மாநாட்டில் பயன்படுத்துவதற்காக 2 லட்சம் மண் ஹாட்பாக்ஸ்கள் தயாரிக்கப்பட்டு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை தயாரிக்கும் பணியினை மேலப்பாளையம் குறிச்சி பகுதியை சேர்ந்த மண்பாண்ட உற்பத்தி நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    இதனைத்தொடர்ந்து அங்கு ஹாட்பாக்ஸ்கள் தயாரிப்பதற்கான பணிகள் தொடங்கி உள்ளது.

    மேலும் அந்த ஹாட்பாக்ஸ்சில் மேல்புறத்தில் ஜி-20 2023 இந்தியா என்ற முத்திரையும், அதனை சுற்றியவாறு ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் உள்ளிட்ட வாசகங்களும் இடம் பெற்றுள்ளது.

    இந்த பணிகள் தொடங்கியுள்ளதையடுத்து பணிகள் முடிந்து மாநாட்டிற்கு அனுப்பி வைக்கப்படும் என கூறப்படுகிறது.

    மேலும், அடுத்த மாதம் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பொங்கல் மண்பானைகள், அடுப்புகள் ஆகியவை தயாரிக்கும் பணி குறிச்சி பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இதற்காக ஆயிரக்கணக்கான பானைகள் தயாரிக்கப்பட்டு அதற்கு வர்ணங்கள் பூசும் பணியும் நடந்து வருகிறது.

    இதுதொடர்பாக மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டுள்ள முருகன் கூறியதாவது:-

    மலேசியாவில் பொங்கல் பண்டிகைக்கு 10 நாளைக்கு முன்னரே பொங்கல் சந்தை என்ற பெயரில் வியாபாரிகள் கூடுவார்கள். அந்த சந்தையில் தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு கிடைக்கும் அனைத்து பொருட்களும் விற்கப்படும்.

    இதற்காக நெல்லையில் ஆர்டர் பெற்று பொங்கல் பானை தயாரிக்கிறோம். மலேசியாவிற்கு அனுப்புவதற்காக 3 லிட்டர், 2.5 லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 ஆயிரம் மண்பானைகள் தயாரித்துள்ளோம். இந்த பானைக்கு வர்ணம் பூசும் பணி தற்போது நடந்து வருகிறது. இந்த பணியில் மதுரையை சேர்ந்த கோவில் கோபுரங்களுக்கு பஞ்சவர்ணம் பூசும் கலைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    அடுத்த சில நாட்களில் இந்த பணிகள் முடிவடைந்து பானைகள் கப்பலில் மலேசியாவிற்கு அனுப்பி வைக்கப்படும். ஒரு பானையின் விலை ரூ.150 க்கு வழங்குகிறோம். சமீபத்தில் கோவையில் உலக சாதனைக்காக 75 ஆயிரம் மண் ஹாட்பாக்ஸ்கள் தயாரித்து நெல்லையில் இருந்து 17 லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டன.

    அங்கு நடந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பாராட்டினார். அதன் தொடர்ச்சியாக இந்தியாவில் அடுத்து ஆண்டு நடைபெறும் ஜி-20 நாடுகளின் பிரதிநிதிகள் மாநாட்டின்போது 2 லட்சம் மண் ஹாட்பாக்ஸ்கள் அனுப்ப கேட்டுக்கொண்டுள்ளனர்.

    இதற்காக மத்திய அரசும், மாநில அரசும் உதவுகிறது.

    இதேபோல் வழக்கமாக விற்பனை செய்வதற்காக மண் அடுப்புகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. 3 அடுப்பு கட்டி செட் ரூ.150-க்கு விற்கப்படுகிறது.

    பெரிய பொங்கல் பானை, அதற்கான மூடி, மண்பானைகளும் தயார் செய்யப்படுகின்றன. பொங்கல் பண்டிகையின்போது புதுப்பானையில் பொங்கலிடுவார்கள் என்பதால் பெரிய அளவிலான மண்பானைகளுக்கு வியாபாரிகள் ஆர்டர் கொடுத்துள்ளனர்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×