search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    டாஸ்மாக் கடைகளில் பறக்கும் படை தீவிர கண்காணிப்பு- 30 சதவீதம் வியாபாரம் அதிகரித்தால் விசாரணை நடத்த முடிவு
    X

    டாஸ்மாக் கடைகளில் பறக்கும் படை தீவிர கண்காணிப்பு- 30 சதவீதம் வியாபாரம் அதிகரித்தால் விசாரணை நடத்த முடிவு

    • தேர்தல் நேரத்தில் நபர் ஒருவருக்கு 3 குவார்ட்டர் பாட்டில்களுக்கு மேல் கொடுக்கக்கூடாது என்பது தேர்தல் ஆணைய விதிகளில் ஒன்றாக உள்ளது.
    • தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு கடந்த 16-ந்தேதியில் இருந்து எவ்வளவு மதுபாட்டில்கள் விற்பனையாகி உள்ளன? என்பது பற்றிய கணக்கையும் கேட்டுப்பெற்றுள்ளனர்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலை அமைதியான முறையில் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக குற்றப் பின்னணி கொண்ட ரவுடிகளை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    தேர்தல் நேரத்தில் அரங்கேறும் பெரும்பாலான குற்றச்செயல்களுக்கு அளவுக்கு அதிகமான மதுபோதையே காரணம் என்பதால் டாஸ்மாக் கடைகளுக்கும் தேர்தல் ஆணையம் கடிவாளம் போட்டு உள்ளது.

    தேர்தல் நேரத்தில் நபர் ஒருவருக்கு 3 குவார்ட்டர் பாட்டில்களுக்கு மேல் கொடுக்கக்கூடாது என்பது தேர்தல் ஆணைய விதிகளில் ஒன்றாக உள்ளது. அதனை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்று பறக்கும் படை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

    இதைத் தொடர்ந்து பறக்கும் படை அதிகாரிகள் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். டாஸ்மாக் கடைகளில் மதுவாங்கி விட்டு வெளியே செல்பவர்கள் எத்தனை மதுபாட்டில்களை வாங்கிச் செல்கின்றனர்? விதிகளை மீறி அவர்களுக்கு மொத்தமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பது பற்றி பறக்கும் படையினர் அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறார்கள்.

    இது தொடர்பாக டாஸ்மாக் கடைகளில் பறக்கும் படை அதிகாரிகள் திடீர் சோதனையிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த சோதனைகளின் போது டாஸ்மாக் கடைகளில் உள்ள மதுபாட்டில் இருப்பை கணக்கிடும் அதிகாரிகள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு கடந்த 16-ந்தேதியில் இருந்து எவ்வளவு மதுபாட்டில்கள் விற்பனையாகி உள்ளன? என்பது பற்றிய கணக்கையும் கேட்டுப்பெற்றுள்ளனர்.

    கடந்த 2 வாரங்களில் விற்பனையான மதுபாட்டில்களின் எண்ணிக்கையை அதற்கு முந்தைய வாரத்தோடு ஒப்பிட்டு பார்த்து கூடுதலாக மொத்தமாக மதுவிற்பனை நடைபெற்று உள்ளதா? என்கிற விசாரணையிலும் இறங்கி உள்ளனர்.

    டாஸ்மாக் கடைகளில் வழக்கமாக நடைபெறும் மது விற்பனையை விட 30 சதவீதம் அளவுக்கு கூடுதலாக மதுவிற்பனை நடைபெற்றிருப்பதால் அதுபற்றி டாஸ்மாக் அதிகாரிகள் கேள்வி எழுப்புவது இல்லை. அதே நேரத்தில் 30 சதவீதத்துக்கும் அதிகமாக மதுவிற்பனை நடந்திருந்தால் அதுபற்றி டாஸ்மாக் அதிகாரிகளும், பறக்கும் படையினரும் விசாரித்து வருகிறார்கள்.

    அதே நேரத்தில் சென்னையில் பல இடங்களில் இந்தத் தேர்தல் விதிமுறைகளை மீறி டாஸ்மாக் கடைகளில் பெட்டி பெட்டியாக மதுபாட்டில்கள் மொத்தமாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. குறிப்பாக மத்திய சென்னை தொகுதிக்கு உட்பட்ட அயனாவரம் உள்ளிட்ட இடங்களில் டாஸ்மாக் மதுபாட்டில்கள் மொத்தமாக வாங்கி பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

    இதுபோன்று பதுக்கி வைக்கப்பட்டுள்ள மதுபாட்டில்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

    Next Story
    ×