search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கருகும் நெற்பயிர்களை காப்பாற்ற தண்ணீர் கோரி அறந்தாங்கியில் விவசாயிகள் போராட்டம்
    X

    கருகும் நெற்பயிர்களை காப்பாற்ற தண்ணீர் கோரி அறந்தாங்கியில் விவசாயிகள் போராட்டம்

    • தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களுக்கு, இந்தாண்டு தென்மேற்கு பருவமழை கைகொடுக்கவில்லை.
    • 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நாகுடி கடைவீதியில் இன்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அறந்தாங்கி:

    காவிரி நீரை நம்பி புதுக்கோட்டை மாவட்டங்களில் சாகுபடி செய்த விவசாயிகள், எதிர்பார்த்த நீர்வரத்து இல்லாததால் கருகும் பயிர்களை காப்பாற்ற முடியாமல் கண்ணீர் வடிக்கின்றனர்.

    சேலம் மாவட்டம், மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம் 120 அடி. கடந்த ஜூன் 12ல், டெல்டா குறுவை பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

    அப்போது அணை நீர்மட்டம், 103.35 அடியாக இரு ந்தது. அணையிலிருந்து, 3,000 கன அடியிலிருந்து படிப்படியாக அதிகரித்து, 13 ஆயிரம் கனஅடி வரை நீர் திறக்கப்பட்டது.

    இதையடுத்து, 5 லட்சம் ஏக்கரில் டெல்டா விவசாயிகள் பயிர் நடவு செய்யும் பணியில் இறங்கினர்.

    அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டாலும், பல இடங்களில் உள்ள கடைமடை பகுதிகளில் தண்ணீர் செல்லவில்லை. டெல்டா மாவட்டங்களில், 1.5 லட்சம் ஏக்கரில் போர்வெல் மற்றும் பிற நீர் ஆதாரங்களை நம்பியும், காவிரி நீரை நம்பி, 3.5 லட்சம் ஏக்கரிலும் விவசாயம் நடக்கிறது.

    தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களுக்கு, இந்தாண்டு தென்மேற்கு பருவமழை கைகொடுக்கவில்லை. இருப்பினும், கர்நாடகா அணைகளில் போதிய நீர் இருப்பு உள்ள நிலையில், குடிநீர் தேவையை காரணம் காட்டி, தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட கர்நாடகா அரசு மறுத்து வருகிறது.

    காவிரி நீர் ஒழுங்காற்று குழு உத்தரவையும் மதிக்காத கர்நாடகா அரசு, தமிழகத்துக்கு தண்ணீர் தர முடியாது என, திட்டவட்டமாக தெரிவித்து வருகிறது.

    இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கல்லணைக்கால்வாய் கடைமடை பகுதியில் சுமார் 27 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் விவசாயிகள் நெற்பயிர் சாகுபடி செய்து ள்ளனர்.

    இந்தாண்டு பருவத்தோடு மழை பெய்யத் தொடங்கியதாலும் காவிரியில் தண்ணீர் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் விவசாயப் பணிகளை தீவிரமாக மேற்கொண்டனர்.

    தற்போது தண்ணீர் வரத்தும் இல்லை. மழையும் இல்லை. இதனால், சூல் பருவத்தில் நெற்கதிர்கள் வெளிவருவதற்கு பதிலாக, பதர்கள் கருகி வெளிவரும் அபாயம் உருவாகியுள்ளது

    இதனால் மன வேதனையடைந்த விவசாயிகள் காவிரியில் தண்ணீர் திறத்துவிட மறுக்கும் கர்நாடகாவை கண்டித்தும், தண்ணீரை பெற்றுத்தர மத்திய அரசை வலியுறுத்தியும் கல்லணை கால்வாய்கடைமடை பகுதி பாசன தாரர்கள் சங்க தலைவர் கொக்கு மடை ரமேஷ் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நாகுடி கடைவீதியில் இன்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அமைப்புகள், விவசாயிகள், அரசியல் கட்சிகள் கலந்துகொண்டு, தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி முழக்கமிட்டனர்.

    Next Story
    ×