search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    விவசாயத்தில் நஷ்டம்-கடன் சுமை: பூச்சி மருந்து குடித்து விவசாயி தற்கொலை
    X

    விவசாயி செந்தில்

    விவசாயத்தில் நஷ்டம்-கடன் சுமை: பூச்சி மருந்து குடித்து விவசாயி தற்கொலை

    • செந்தில் மின் மோட்டார் பழுது, சீரமைப்பு பணிக்காக வட்டிக்கு கடன் வாங்கியிருந்தார்.
    • செந்திலின் தந்தை அங்குச்சாமி கொடுத்த புகாரின்பேரில் நரிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சுழி:

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகேயுள்ள இசலி கிராமத்தை சேர்ந்தவர் செந்தில் (வயது 38). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். விவசாயியான செந்தில் இசலி பகுதியிலுள்ள தனக்கு சொந்தமான சில ஏக்கர் பரப்பளவிலான நிலங்களில் நெல், கடலை, சோளம் உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டு விவசாயம் செய்து வந்தார்.

    இந்த நிலையில் பயிர்களின் நீர் பாசனத்திற்காக தனது நிலத்தில் லட்சக்கணக்கில் கடன் வாங்கி முதலீடு செய்து மோட்டார் பம்பு செட்டும் அமைத்திருந்தார். இதனால் அவர் கடுமையான கடன் சுமைக்கு ஆளானார். அடிக்கடி மின் மோட்டார் பழுது, சீரமைப்பு பணிக்காகவும் வட்டிக்கு கடன் வாங்கியிருந்தார்.

    விரக்தியில் இருந்த அவர் நேற்று முன்தினம் காலை வயலுக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். அப்போது தனக்கு சொந்தமான வயலில் பயிர்களுக்காக வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்தார். பின்னர் அங்கிருந்து வீடு திரும்பிய செந்தில் மிகவும் சோர்வாக இருந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் செந்திலிடம் கேட்டபோது தான் பூச்சி மருந்தை குடித்து விட்டதாக கூறியுள்ளார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உடனடியாக செந்திலை மீட்டு நரிக்குடி அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கிருந்து அருப்புக்கோட்டை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று மீண்டும் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலையில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து செந்திலின் தந்தை அங்குச்சாமி கொடுத்த புகாரின்பேரில் நரிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டம், கடன் சுமையால் விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இசலி, சுற்று பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×