search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பேச்சுவார்த்தையில் உடன்பாடு- ஈரோடு மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் மீண்டும் பணிக்கு திரும்பினர்
    X

    ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றிய தூய்மை பணியாளர்கள்

    பேச்சுவார்த்தையில் உடன்பாடு- ஈரோடு மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் மீண்டும் பணிக்கு திரும்பினர்

    • தூய்மை பணியாளர்களின் 8 நாள் போராட்டம் காரணமாக 800 டன் குப்பைகள் குவிந்தன.
    • தூய்மை பணியாளர்கள் வழக்கம்போல் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சியில் தூய்மை பணிகளை தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் விடுவதை கைவிட வேண்டும், இதற்கான டெண்டர் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும், 480 நாட்கள் பணியாற்றிய தினக்கூலி பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும்,

    குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழ் அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியமான நாள் ஒன்றுக்கு ரூ. 725 ஏப்ரல் முதல் முன்தேதியிட்டு வழங்க வேண்டும், மாதந்தோறும் முதல் தேதி ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி, சி.ஐ.டி.யு, எல்.பி.எப்., உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் கடந்த 23-ந் தேதி முதல் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் மற்றும் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    ஆர்ப்பாட்டம், காத்திருப்பு போராட்டம், உண்ணாவிரதம், கலெக்டர் அலுவலகத்தில் மனு, கோரிக்கை அட்டைகள் ஏந்தி போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். தூய்மை பணியாளர்களின் போராட்டம் காரணமாக மாநகரில் குப்பைகள் ஆங்காங்கே குவியத்தொடங்கியது.

    தூய்மை பணியாளர்களின் 8 நாள் போராட்டம் காரணமாக 800 டன் குப்பைகள் குவிந்தன. உடனடியாக தூய்மை பணியாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்நிலையில் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் நாகரத்தினம் தலைமையில், துணை மேயர் செல்வராஜ், ஆணையாளர் ஜானகி முன்னிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் மாநகராட்சி அலுவலகத்தில் தொழிற்சங்க நிர்வாகிகளான ஏ.ஐ.டி.யு.சி. சின்னசாமி, சி.ஐ.டி.யு. சுப்பு, எல்.பி.எப். கோபால், ஆதித்தமிழர் தொழிற்சங்கம் மாரியப்பன், எல்.பி.எப். கிருஷ்ணன், ஏ.ஐ.டி.யு.சி. மணியன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    இந்த பேச்சுவார்த்தை இரவு 9 மணி அளவில் நிறைவடைந்தது. இதில் அனைவருக்கும் வேலை வழங்கப்படும் என்றும், சம்பளம் தொடர்பான குறைகள் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததை தொழிற்சங்க நிர்வாகிகள் ஏற்றுக்கொண்டனர்.

    இதையடுத்து இன்று காலை ஈரோடு மாநகராட்சி மைய அலுவலகத்திற்கு வந்த தூய்மை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை விபரங்களை தொழிற்சங்க நிர்வாகிகள் விளக்கி கூறினர். இதையடுத்து 8 நாட்களாக நீடித்து வந்த வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    இதையடுத்து தூய்மை பணியாளர்கள் இன்று முதல் பணிக்கு திரும்பினர். தூய்மை பணியாளர்கள் வழக்கம்போல் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×