என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

நெய்வேலியில் என்.எல்.சி. 2-வது சுரங்க கன்வேயர் பெல்டில் தீப்பிடித்து எரிவதால் பரபரப்பு
- நெய்வேலி மந்தாரக்குப்பத்தில் 2-வது சுரங்கம் உள்ளது.
- 2 கன்வேயர் பெல்ட்டுகள் உரசியதால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
நெய்வேலி:
நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள சுரங்கத்தில் இருந்து எடுக்கப்பட்ட நிலக்கரியை கொண்டு மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இங்கிருந்து தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் மின்சாரம் அனுப்பப்பட்டு வருகிறது.
நெய்வேலி மந்தாரக்குப்பத்தில் 2-வது சுரங்கம் உள்ளது. இந்த சுரங்கத்தில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட நிலக்கரி கன்வேயர் பெல்ட் மூலமாக மின் உற்பத்திக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்த கன்வேயர் பெல்ட்டில் மதியம் 12 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. 2 கன்வேயர் பெல்ட்டுகள் உரசியதால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த தீ அருகில் இருந்த எந்திரத்துக்கும் பரவியது. இதனை பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனாலும் லட்சக்கணக்கான மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானதாக கூறப்படுகிறது.
என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சம்பள உயர்வு உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நேரத்தில் இந்த தீ விபத்து நடந்துள்ளது.
இதுகுறித்து ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்க தலைவர் சேகர் கூறும்போது, ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தினர் கடந்த 9 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் இதுவரை எட்டப்படவில்லை. எங்கள் போராட்டம் காரணமாக அனுபவம் இல்லாத தொழிலாளர்களை கொண்டு பணிகள் நடைபெறுவதால், சரியான பராமரிப்பு இல்லாததால் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றார்.






