search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னை-புறநகர் பகுதிகளில் அதிகாலையில் இடி-மின்னலுடன் பலத்த மழை
    X

    சென்னை-புறநகர் பகுதிகளில் அதிகாலையில் இடி-மின்னலுடன் பலத்த மழை

    • நுங்கம்பாக்கம் பகுதியில் அதிகபட்சமாக 5 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பெய்த மழையால் குளிர்ச்சி நிலவியதால் நகரவாசிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    சென்னை:

    தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக ஒரு சில பகுதிகளில் இடி-மின்னலுடன் மழை பெய்து வருகிறது. சில மாவட்டங்களில் கன மழையும் பெய்தது.

    சென்னையில் பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் அதிகாலை 3 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது. இடி-மின்னலுடன் சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டியது.

    இதே போல சென்னையை ஒட்டிய காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களை உள்ளடக்கிய புறநகர் பகுதியிலும் சில இடங்களில் கனமழை பெய்தது. ஒரு சில இடங்களில் கன மழையாகவும், சில பகுதிகளில் லேசாகவும் பெய்தது. காலை 6 மணி வரை மழை தூறல் இருந்து கொண்டே இருந்தது.

    அதிகாலையில் பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. புதுப்பேட்டை லண்ட்ஸ் கார்டன் தெரு, கோபாலபுரம் விளையாட்டு மைதானம் மெயின் ரோடு, நுகர்பொருள் வாணிப கழக அலுவலக வளாகம், அவ்வை சண்முகம் சாலை, அண்ணா சாலை வுட்ஸ் ரோடு, ராயப்பேட்டை பகுதி, கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் மழை நீர் தேங்கி நின்றது.

    சென்னையில் பெரும்பாலான சாலைகளில் மழை நீர் உடனே வடிந்து விட்ட நிலையில் இன்னும் ஒரு சில இடங்களில் மட்டுமே தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

    நுங்கம்பாக்கம் பகுதியில் அதிகபட்சமாக 5 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. தாம்பரம், பூந்தமல்லி, புழல், செங்குன்றம், மதுரவாயல், போரூர், கீழ்க்கட்டளை, பல்லாவரம், சோழிங்கநல்லூர், ஆவடி, திருநின்றவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியிலும் மழை பெய்து உள்ளது.

    ஓணம் பண்டிகையையொட்டி இன்று சென்னை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டதால் அரசு அவவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் எதுவும் செயல்படவில்லை. இதனால் மாணவ-மாணவிகள் வீடுகளில் இருந்தனர்.

    இதற்கிடையில் தாழ்வான பகுதியில் தேங்கிய மழை நீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். பெரிய அளவில் தண்ணீர் தேக்கம் இல்லை என்றாலும் மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் தண்ணீர் தேங்கிய பகுதிக்கு சென்று அகற்றினர்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பெய்த மழையால் குளிர்ச்சி நிலவியதால் நகரவாசிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    திருவள்ளூர் மாவட்டம் மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை கனமழை பெய்தது. அதிகபட்சமாக திருவலாங்காட்டில் 4.2 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. ஆவடி-4 செ.மீ.செங்குன்றம்-2 செ.மீ. மழை பெய்துள்ளது.

    Next Story
    ×