search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பிரதமர் மோடி வருகை எதிரொலி: சென்னையில் டிரோன்கள் பறக்க தடை
    X

    பிரதமர் மோடி வருகை எதிரொலி: சென்னையில் டிரோன்கள் பறக்க தடை

    • பிரதமரின் பாதுகாப்பு வாகனம் செல்லும் வழித்தடங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    • சென்னையில் உள்ள தங்கும் விடுதிகள், நட்சத்திர ஓட்டல்களில் சோதனை நடத்தப்படுகிறது.

    சென்னை:

    தமிழ்நாட்டுக்கு 3 நாட்கள் பயணமாக பிரதமர் மோடி நாளை வருகிறார். சென்னையில் 'கேலோ' இந்தியா விளையாட்டு போட்டியை தொடங்கி வைக்கும் அவர், ஸ்ரீரங்கம், ராமேசுவரம் கோவில்களுக்கும் சென்று தரிசனம் செய்ய உள்ளார்.

    சென்னையில் நாளை மாலை கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். விழாவில், கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

    பிரதமர் மோடி வருகையையொட்டி, சென்னையில் நாளை மற்றும் நாளை மறுநாள் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    மேலும் பிரதமரின் பாதுகாப்பு வாகனம் செல்லும் வழித்தடங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை விமான நிலையம், ஐ.என்.எஸ். அடையார், ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம், ராஜ் பவன் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    ராஜ் பவனிலிருந்து சென்னை சர்வதேச விமான நிலையம் வரையிலும் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னையில் ஐந்தடுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது. சென்னையில் 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    சென்னையில் உள்ள தங்கும் விடுதிகள், நட்சத்திர ஓட்டல்களில் சோதனை நடத்தப்படுகிறது. முக்கிய சாலைகள் மற்றும் சந்திப்புகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    சென்னையில் உள்ள முக்கிய ரெயில் நிலையங்கள், பேருந்து முனையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×