search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தி.மு.க. இளைஞர் அணியில் வாய்ப்பு கிடைக்காதவர்கள் சோர்வடைய வேண்டாம்- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
    X

    தி.மு.க. இளைஞர் அணியில் வாய்ப்பு கிடைக்காதவர்கள் சோர்வடைய வேண்டாம்- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

    • புதிய நிர்வாகிகள் தேர்வுக்கான அறிவிப்பை கடந்த டிசம்பர் 12-ந் தேதி வெளியிட்டோம்.
    • விண்ணப்பித்த 4,158 பேர்களில் 609 பேர் தேர்வாகி இளைஞர் அணியின் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    சென்னை:

    தி.மு.க. இளைஞரணிக்கு மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் நேற்று புதிதாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    புதிய நிர்வாகிகள் நியமனம் குறித்து இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறி இருப்பதாவது:-

    தி.மு.க. இளைஞர் அணியின் செயலாளராக 4 ஆண்டுகளை நிறைவு செய்து 5-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன்.

    இந்த நேரத்தில் மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் பட்டியலை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    இந்த புதிய நிர்வாகிகள் தேர்வுக்கான அறிவிப்பை கடந்த டிசம்பர் 12-ந் தேதி வெளியிட்டோம்.

    72 கழக மாவட்டங்களில் இருந்தும் 4,158 விண்ணப்பங்கள் குவிந்தன. விண்ணப்பதாரர்கள் அனைவரிடமும் அன்பகத்தில் இருந்து அழைத்து பேசி தகவல்களை பெற்று விண்ணப்பங்களை ஆவணமாக மாற்றினோம். இதைத் தொடர்ந்து பல நாட்களாக நேர்காணல் நடத்தினோம்.

    யாரைத் தேர்வு செய்வது யாரை விடுவது என எண்ணும் வகையில் நேர்காணல் அமைந்தது. தகுதியும், கழக உணர்வும் நிறைந்த பல இளைஞர்களை நேர்காணலில் காண முடிந்தது.

    தங்களின் பணிகளை எல்லாம் தொகுத்து அளித்த ஆல்பங்களையும், நிர்வாகிகளின் மினிட் புத்தகங்களையும் பார்க்கும் போது எனக்கு பெரும் பொறுப்பு இருப்பதை உணர்த்தியது.

    அமைப்பு ரீதியாக இளைஞர் அணியை நம்முடைய தலைவர் எந்த அளவுக்கு வலுப்படுத்தி இருக்கிறார் என்பதை உணர முடிந்தது.

    அந்த பணிகளை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்த நேர் காணலை தொடர்ந்தோம்.

    நேர்காணலை மட்டும் வைத்து முடிவு செய்யாமல், அவர்களின் களப்பணிகளையும் துணைச் செயலாளர்களின் உதவியுடன் கேட்டறிந்து விவாதித்து ஒவ்வொரு முடிவையும் எடுத்து உள்ளோம்.

    இதில் அனுபவம் வாய்ந்த சில அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் அதே பொறுப்புகளில் தொடர்ந்து பணியாற்ற தலைவர் வாய்ப்பு வழங்கி உள்ளார்.

    விண்ணப்பித்த 4,158 பேர்களில் 609 பேர் தேர்வாகி இளைஞர் அணியின் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    புதிதாக நியமிக்கப்பட்டு உள்ள இளைஞரணி நிர்வாகிகள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். இதில் வாய்ப்பு கிடைக்காதவர்கள் சோர்வடைய வேண்டாம். உங்களின் கழகப்பணி உரிய நேரத்தில் அங்கீகரிக்கப்படும்.

    நாம் அனைவரும் இணைந்து கழக பணியை மேற்கொள்வோம். தொடர்ந்து இணைந்து பயணிப்போம்.

    இளைஞர் அணியை இயக்கத்தின் 'புது ரத்தம்' என்று கலைஞர் சொல்வார்.

    இன்று புத்துணர்ச்சியோடு இயக்கப் பணியை தொடங்கி உள்ள நீங்கள் அது சற்றும் குறைந்திடாமல் பணிகளை தொடர்ந்திட வேண்டும்.

    இந்திய ஒன்றியம் மிக இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது. வரும் பாராளுமன்ற தேர்தலில் பாசிஸ்டுகளை விரட்டுவதற்கு பெரும் முன்னெடுப்பாக நம் தலைவர் இந்திய ஒன்றியம் முழுவதிலும் உள்ள தோழமை சக்திகளை ஒருங்கிணைக்கிறார்.

    அதற்கு தலைவரின் கரங்களை வலுப்படுத்தும் பெரும் பொறுப்பு நம்மிடம் உள்ளது. நாற்பதையும் வென்று கழகத்தின் வெற்றியை உறுதி செய்திடுவோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×