search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    காஞ்சனகிரி கோவிலை நிர்வகிப்பது தொடர்பாக 2 கிராமத்தினருக்கு இடையே தகராறு
    X

    மலையடிவாரத்தில் திரண்ட பொதுமக்கள்.

    காஞ்சனகிரி கோவிலை நிர்வகிப்பது தொடர்பாக 2 கிராமத்தினருக்கு இடையே தகராறு

    • லாலாபேட்டையை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கோவில் மலை அடிவாரத்தில் திரண்டுள்ளனர்.
    • போலீசார் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    வாலாஜா:

    ராணிப்பேட்டை மாவட்டம் முகுந்தராயபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட காஞ்சனகிரி மலையில் 300 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமையான பிரசித்தி பெற்ற சிவன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் சுற்றுவட்டார பகுதிகளான அக்ராவரம், லாலாபேட்டை, நெல்லிக்குப்பம், மோட்டூர், டெல்லி குப்பம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

    லாலாபேட்டையில் 7000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். முகுந்த ராயபுரம் மற்றும் லாலாபேட்டையை சேர்ந்தவர்கள் கோவிலை நிர்வகித்து வந்ததாக கூறப்படுகிறது. தற்போது சிவன் கோவில் முகுந்தராயபுரம் ஊராட்சியில் உள்ளதால் கோவில் சார்பில் அறக்கட்டளை தொடங்கி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அறக்கட்டளை நிர்வாகிகள் முகுந்தராயபுரத்தை சேர்ந்தவர்களாக மட்டும் இருப்பார்கள் என்றும் லாலாபேட்டை சேர்ந்தவர்கள் புறக்கணிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

    மேலும் லாலாபேட்டையை சேர்ந்தவர்களின் விவசாய நிலங்கள் முகுந்தராயபுரம் பகுதியில் உள்ளதால் அங்குள்ள 4 ஏரிகளில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் பயன்படுத்தக்கூடாது.

    சுடுகாடுகளை பயன்படுத்தக் கூடாது. 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலைக்கு வரக்கூடாது என கட்டுப்பாடுகள் விதித்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த லாலாபேட்டை பகுதியை சேர்ந்த அனைத்து கட்சி பிரமுகர்கள் வியாபாரிகள் பொதுமக்கள் லாலாபேட்டை பஸ் நிலையம் அருகே ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இன்று காலை திரண்டு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் லாலாபேட்டையில் உள்ள அனைத்து கடைகளும் இன்று அடைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த ராணிப்பேட்டை டிஎஸ்பி பிரபு சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்ல வைத்தனர்.

    மேலும் அறக்கட்டளை நிர்வாகிகள் இன்று தேர்வு செய்யப்பட உள்ளதால் லாலாபேட்டையை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கோவில் மலை அடிவாரத்தில் திரண்டுள்ளனர்.

    இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. அங்கு போலீசார் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×