search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இந்தோனேசியாவின் வடக்கு சுமத்திரா மாகாணத்துக்கு சென்னையில் இருந்து நேரடி விமான சேவை
    X

    இந்தோனேசியாவின் வடக்கு சுமத்திரா மாகாணத்துக்கு சென்னையில் இருந்து நேரடி விமான சேவை

    • கொரோனா வைரஸ் தாக்கம், ஊரடங்கு காரணமாக, இந்த விமான சேவை, கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து நிறுத்தப்பட்டது.
    • சென்னைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறுகின்றனர்.

    ஆலந்தூர்:

    இந்தோனேசியா நாட்டில் உள்ளது வடக்கு சுமத்திரா மாகாணம். இந்த மாகாணம், சுமத்திரா தீவின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தென்மேற்குப் பகுதியில் இந்திய பெருங்கடலும், வடகிழக்கு பகுதியில் மலாக்கா நீர் அணையும் அமைந்துள்ளது. இந்த வடக்கு சுமத்திரா மாகாணத் தின் தலைநகர் மேடான்.

    இந்தப் பகுதி இயற்கை அழகு நிறைந்த சுற்றுலா தளம். இதனால் சுற்றுலா பயணிகள் பெருமளவு இங்கு வருகின்றனர். அதோடு இயற்கை காட்சிகள் நிறைந்த இந்த பகுதியில் திரைப்பட படப்பிடிப்புகளும் அதிக அளவில் நடக்கின்றன.

    புகழ்பெற்ற சுற்றுலா தளமான, இந்தோனேசியா நாட்டின் வடக்கு சுமத்திரா மாகாணத்திற்கு, இந்தியாவில் இருந்து நேரடி விமான சேவைகள் இல்லை. இங்கு செல்லும் சுற்றுலா பயணிகள், மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடு களுக்கு சென்று அங்கிருந்து இணைப்பு விமானங்கள் மூலம் இந்தோனேசியாவின் வடக்கு சுமத்திரா மாகாணத்திற்கு சென்று வந்தனர். இந்த நிலையில் இந்தோனேசியா நாட்டின், வடக்கு சுமத்திரா தலைநகர் மேடான் விமான நிலையத்தில் இருந்து, சென்னை விமான நிலையத்திற்கு, நேரடி தினசரி விமான சேவையை தொடங்க, பாட்டிக் ஏர் விமான நிறுவனம் முடிவு செய்தது. அதன்படி இம்மாதம் ஆகஸ்ட் முதல் தேதியில் இருந்து, இந்த விமான சேவையை தொடங்க பாட்டிக் ஏர் விமான நிறுவனம் முடிவு செய்து இருந்தது. அதன் பின்பு நிர்வாக காரணங்களால், அது ஆகஸ்ட் 11-ந் தேதிக்கு மாற்றப்பட்டது.

    சென்னை-இந்தோனேசியா இடையே, ஏற்கனவே இதே விமான நிறுவனம், 2017-ம் ஆண்டு இந்த விமான சேவையை தொடங்கி நடத்திக் கொண்டு இருந்தது. கொரோனா வைரஸ் தாக்கம், ஊரடங்கு காரணமாக, இந்த விமான சேவை, கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து நிறுத்தப்பட்டது. தற்போது 3 ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் இந்த விமான சேவை தொடங்கி உள்ளது.அதன்படி 3 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்பு பாட்டிக் ஏர் விமான நிறுவனத்தின், முதல் விமான சேவை, நேற்று (வெள்ளிக்கிழமை)தொடங்கப்பட்டது. இந்த விமானம், நேற்று மாலை, இந்தோனேசியாவின் வடக்கு சுமத்திரா மாகாணத்தின் மேடான் விமான நிலையத்தில் இருந்து 51 பயணிகளுடன் புறப்பட்டு, நேற்று இரவு 9:45 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வரவேண்டிய விமானம் தாமதமாக இரவு 10:45 மணிக்கு வந்து சேர்ந்தது. இந்தோனேசியா நாட்டில் இருந்து சென்னைக்கு முதல் விமானத்தில் வந்த பயணிகளை, சென்னை விமான நிலையத்தில், விமான நிலைய அதிகாரிகள் உற்சாகமாக வரவேற்றனர்.

    அதன்பின்பு இதே விமானம், நேற்று நள்ளிரவு 12 மணிக்கு 43 பயணிகளுடன், சென்னை சர்வ தேச விமான நிலையத்தில் இருந்து, மீண்டும் இந்தோனேசியாவின் வடக்கு சுமத்திரா மாகாணத்தின் மேடான் விமான நிலையத்திற்கு புறப்பட்டு சென்றது. இந்த விமானம் இன்று (சனிக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு மேடான் விமான நிலையத்தில் சென்று தரை யிறங்கியது. சென்னை- இந்தோனேசியா இடையே 3 ஆண்டுகளுக்கு பின்பு நேரடி தினசரி விமான சேவை தொடங்கப் பட்டுள்ளது, மிகவும் சிறப்பு வாய்ந்தது. சுற்றுலா தளமான, வடக்கு சுமத்திரா மாகாணத்தின் மேடான் நகருக்கு நேரடி விமானம் இயக்கப்படுவது, சுற்றுலா துறையை ஊக்குவிப்பதாக அமையும்.

    இதனால் சுற்றுலா பயணிகள், திரைப்பட படப்பிடிப்பு குழுவினர், மற்றும் தொழில் துறை சம்பந்தப்பட்டவர்கள் பலருக்கு இந்த விமான சேவை பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். தினசரி நேரடி விமானம் மூலம் சுமத்திரா மாகாணம் - சென்னையோடு இணைக்கப்பட்டுள்ளதால், சென்னைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறுகின்றனர்.

    Next Story
    ×