search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    காட்டுத்தீ கட்டுக்குள் வந்ததால் அனுமதி- சதுரகிரியில் மலையேற குவிந்த பக்தர்கள்
    X

    காட்டுத்தீ கட்டுக்குள் வந்ததால் அனுமதி- சதுரகிரியில் மலையேற குவிந்த பக்தர்கள்

    • ஆடி, தை, மகாளய அமாவாசை நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள்.
    • காட்டுத்தீயின் பாதிப்பு காரணமாக சதுரகிரி கோவிலுக்கு செல்ல நேற்று தடை விதிக்கப்பட்டது.

    திருமங்கலம்:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது. மலை உச்சியில் உள்ள இந்த கோவிலுக்கு மாதத்தில் பவுர்ணமி, அமாவாசை ஆகிய நாட்களில் மட்டும் பக்தர்கள் தரிசனம் செய்ய தலா 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

    குறிப்பாக ஆடி, தை, மகாளய அமாவாசை நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள். ஆடி மாத பவுர்ணமி, பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று முதல் வருகிற 2-ந்தேதி வரை சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

    ஆனால் சதுரகிரி வனச்சரகத்திற்குட்பட்ட ஊஞ்சிக் கல் மலையில் காட்டுத் தீ பரவியது. காற்றின் வேகம் காரணமாக தீ சில கிலோ மீட்டர் பரவியதால் அதனை தடுக்க வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.

    காட்டுத்தீயின் பாதிப்பு காரணமாக சதுரகிரி கோவிலுக்கு செல்ல நேற்று தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக மலையேற தாணிப்பாறைக்கு வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஏமாற்றம் அடைந்து திரும்பிச்சென்றனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை முதல் தீயின் பரவல் குறைந்தது. மேலும் இந்த காட்டுத் தீ காரணமாக சதுரகிரி கோவில் அமைந்துள்ள பகுதியில் பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இன்று முதல் பக்தர்கள் மலையேற அனுமதி வழங்கப்பட்டது. இதையொட்டி திரளான பக்தர்கள் இன்று காலை 7 மணி முதல் மலையேறினர்.

    மலை பாதைகளில் நீரோடைகள் மற்றும் முக்கிய பகுதிகளில் வனத்துறையின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆடி பவுர்ணமியை முன்னிட்டு 2-ந்தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என வனத்துறை அறிவித்துள்ளது.

    Next Story
    ×