search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தீபாவளியை பண்டிகையை முன்னிட்டு இன்று திருமங்கலத்தில் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை
    X

    ஆட்டுச்சந்தையில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் திரண்டிருந்ததை காணலாம்.

    தீபாவளியை பண்டிகையை முன்னிட்டு இன்று திருமங்கலத்தில் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை

    • வரத்து குறைவு காரணமாக விலை அதிகரித்துள்ளதாக ஆடுகளின் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
    • அதிகளவில் கூட்டம் கூடியதால் சந்தை நடைபெறும் ஆட்டுச்சந்தையில் கடும் இடநெருக்கடி உண்டானது.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் ஆட்டுசந்தை தென் மாவட்ட அளவில் நடைபெறும் பெரிய ஆட்டுசந்தையாகும். ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை நடைபெறும் இந்த ஆட்டுச்சந்தையில் 8 ஆயிரம் முதல் 10 ஆடுகள் வரை விற்பனையாவது வழக்கம்.

    இந்தநிலையில் நாளை மறுநாள் தீபாவளி பண்டிகையையொட்டி இன்று சிறப்பு ஆட்டுச்சந்தை நடைபெற்றது. அதிகாலை 4 மணிக்கு தொடங்கிய இந்த சந்தை நண்பகல் 11 மணி வரை நடைபெற்றது. இதில் உள்ளூர் ஆடுகளை தவிர ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிலில் இருந்தும் லாரிகளில் பல ஆயிரக்கணக்கான ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. ஆடுகளை வாங்க ஏராளமான பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் குவிந்தனர்.

    ஆடுகளை வாங்க மதுரை, விருதுநகர், சிவகாசி, கம்பம், உசிலம்பட்டி, வத்தலக்குண்டு, ராஜபாளையம், சிவகங்கை, காரைக்குடி பகுதிகளிலிருந்து ஏராளமான வியாபாாிகள் வந்திருந்தனர். இதனால் சந்தை நடைபெற்ற ஆட்டுச்சந்தை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இதுகுறித்து ஆடு விற்பனையாளர்கள் கூறுகையில் தீபாவளி, பொங்கல் மற்றும் ரம்ஜான் பண்டிகை காலங்களில் திருமங்கலம் ஆட்டுச்சந்தையில் அதிகளவில் ஆடுகள் விற்பனையாவது வழக்கம்.

    இந்தாண்டு தீபாவளி நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி ஆடுகள் வாங்க ஆயிரக்கணக்கானோர் வந்துள்ளனர். இதில் 10 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரையில் ஆடுகள் விற்பனையாகியுள்ளது. அதே போல் ஆடுகளின் விலையும் அதிகரித்துள்ளது. 5 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனை செய்யப்படுகின்றன. கடந்தாண்டை விட இந்த ஆண்டு ஆடுகளின் விலை ஆயிரம் ரூபாயிலிருந்து 3 ஆயிரம் ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

    வரத்து குறைவு காரணமாக விலை அதிகரித்துள்ளதாகவும் ஆடுகளின் உரிமையாளர்கள் தெரிவித்தனர். தீபாவளி சிறப்பு ஆட்டுச்சந்தையான இன்று ஒருநாள் மட்டும் சுமார் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளது. அதிகளவில் கூட்டம் கூடியதால் சந்தை நடைபெறும் ஆட்டுச்சந்தையில் கடும் இடநெருக்கடி உண்டானது.

    எனவே நகராட்சி நிர்வாகம் ஆட்டுச்சந்தையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்தனர். தீபாவளியையொட்டி கடந்த சில வாரங்களாக ஆடுகளின் விலை அதிகரித்து வந்ததாகவும் தீபாவளி முடிந்த பிறகு ஆடுகளின் விலையும் குறையும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    திருமங்கலம் ஆட்டுச்சந்தையில் கோழி விற்பனையும் நடைபெறுவது வழக்கம். ஆட்டுச்சந்தையின் வாசல் பகுதியில் ஏராளமான கோழி வியாபாரிகள் நாட்டு கோழிகள், சேவல்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதனையும் ஏராளமானோர் வாங்கி சென்றனர்.

    Next Story
    ×